மக்களின் முடிவே எங்கள் இறுதி முடிவு


மக்கள் வேண்டாம் என்றால் புதிய அரசியலமைப்பை உருவாக்காதிருக்க தயாரெனவும், அவ்வாறே பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை பேண ஜனாதிபதியும் தாமும் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
மாகாநாயக்க தேரர்களின் கருத்துகள் அறியப்படும். அதன் (அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின்) தலைவர் என்ற அடிப்படையில், மகாநாயக்க தேரர்களை சந்திப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், ஏனைய மதத் தலைவர்களின் கருத்துகளும் அறியப்படும். இந்த நிலையில், தற்போதுவரை எந்தவொரு அறிக்கையில் வெளியிடப்படவில்லை. இடைக்கால அறிக்கை மட்டுமே வெளியிடப்படும்.
அத்துடன், ஏனைய தரப்பினர்களினதும் கருத்துகளும் அறியப்படும். இந்த கருத்துக்களின் அடிப்படையில் ஏற்படும் இணக்கப்பாடுகளைக் கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.
எவ்வாறிருப்பினும், மக்கள் வேண்டாம் என்றால் இந்தப் பணிகளை கைவிட முடியும். ஏனெனில் மக்கள்தான் ஆணை வழங்கினர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.