லொறி குடைசாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு(க.கிஷாந்தன்)

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லேன்ட் பகுதியில் பிரதான வீதியில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வுட்லேன்ட் பகுதியில் 11.07.2017 விடியற்காலை 1  மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது. வெலிமடையிலிருந்து கொழும்பிற்கு 26,730 கிலோகிராம் தேயிலை தூளை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனத்தின் பிரதான முகப்பு விளக்கை (ஹெட்லைட்) கட்டுப்படுத்ததால் குறித்த லொறியின் சாரதிக்கு குறித்த லொறியை கட்டுப்படுத்த முடியவில்லை என விபத்திற்கான காரணமாக அறியமுடிகின்றது என பொலிஸார் தெரிவித்தனர். எனினும் தேயிலை தூளை மற்றைய லொறி ஒன்றுக்கு ஏற்றி அனுப்பியுள்ளனர்.

விபத்தினால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததோடு, மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகள் ஆகிய சிறிய ரக வாகனங்களே இவ்வீதியில் பயணிக்கமுடிந்தது. ஏனைய கனரக வாகனங்கள் மாற்றுவழியின் ஊடாக அட்டன் மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், லொறியை வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததனால் அரச ஊழியர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பல சிரமங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடதக்கது.