மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர ரிசாத் திரைமறைவில் செயல்படுகின்றாரா?

 ராஜபக்சவினை  அமைச்சர் ரிசாத்த பதியுதீனின் அடியாட்கள் என்று அழைக்கப்படுகின்ற வன்னியை சேர்ந்த அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய விசுவாசிகள் சிலர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவையும் இரகசியமாக சந்தித்த விவகாரம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துகொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு முகவராக செயல்ப்பட்டு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மகிந்தராஜபக்சவின் ஆட்சியை கொண்டுவருவதற்காக திரைமறைவில் பல சூழ்ச்சிகளில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார் என்ற விடயம் அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது.

மகிந்தராஜபக்ஸ ஆட்சியில் முஸ்லிம் மக்கள் வீதியில் இறங்கி அவரது ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு கோசங்கள் போடுகின்ற நிலைமைக்கு அந்த ஆட்சியில் அராஜகத்தன்மையும், சர்வாதிகாரமும் மேலோங்கி இருந்தது.
அப்படி இருந்தும் அன்றைய மகிந்தவின் அரசாங்கத்துக்கு எதிராக எதுவுமே பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு, இன்றய அரசாங்கத்துக்கு எதிராக அடிக்கடி ஊடக அறிக்கைகள் விடுவதனால், அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது அரசியல் மட்டத்தில் பலத்த சந்தேகம் இருந்துகொண்டு வருகின்றது.

அந்த சந்தேகமானது இன்று வெளியாகிய புகைப்படம் மூலம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமைச்சர் ரிசாத்தின் நண்பரான பசில் ராஜபக்சவையும், அவர் மூலமாக மகிந்த ராஜபக்சவையும் இரகசியமாக அமைச்சர் ரிசாத் சந்தித்திருந்தார் என்ற செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகி இருந்தது.

இங்கே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் நம்பிக்கைக்குரிய குழுவினர்கள் முன்னாள் ஜனாதிபதியையும், அவரது புதல்வரையும் இரகசியமாக சந்திப்பினை மேற்கொண்ட விவகாரமானது, ரிசாத் பதியுதீனை விட்டு விலகித்தான் மகிந்த ராஜபக்ஸவின் பக்கம் தாவுவதற்காக சென்றுள்ளார்களா என்று ஆராய்ந்தால் விடயம் அதுவல்ல.

ஏனெனில் இவர்கள் அமைச்சர் ரிசாத்தின் நம்பிக்கைக்குரிய அடிமட்ட தொண்டர்கள் மட்டுமல்லாது, இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் அமைச்சர் ரிசாத்தினால் சமுர்த்தி உத்தியோகமும், ஏனைய சலுகைகளும் பெற்றுக்கொண்டவர்கள்.

அமைச்சருக்கு வன்னியில் கூட்டம் நடாத்துவது என்றாலோ, அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக ஏதாவது செயல்பாடுகளினை மேற்கொள்வதாக இருந்தாலோ இவர்களே முன்னின்று களமிறங்கி செயல்பட்டு வருகின்றவர்கள்.

அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் வில்பத்து விவகாரத்தினை ஆராயும் பொருட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் முசலி பிரதேச சபையில் கூட்டம் நடாத்தியபோதும், அதன் பின்பு வில்பத்து பிரதேசத்துக்கு நேரடியாக நிபுணர்களை அழைத்துக்கொண்டு செல்ல முற்பட்டபோதும் அங்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக களத்தில் முன்னின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் இந்த குழுவினர்களே ஆகும்.

எனவே மகிந்த ராஜபக்சவின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியினை மீண்டும் கொண்டுவருவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது இந்த புகைப்படம் வெளியானதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது