சவுதி அரேபிய இளவரசரை கைது செய்ய உத்தரவு ; மன்னரின் அதிரடி நடவடிக்கைசவுதி அரேபியா இளவரசர் செளத் அப்துல் அஜிஸ் பொதுமக்களை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் பொதுமக்களில் சிலரை இளவரசர் அப்துல் அஜிஸ் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மன்னர் சல்மான் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இளவரசரால் தாக்கப்பட்ட நபர்கள் இரத்தம் சொட்ட படுகாயமடைந்துள்ளனர். அது மட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.
அநீதி, சர்வாதிகாரம், துன்புறுத்தல் மற்றும் தீங்கு விளைவிப்பது போன்றவற்றை தடை செய்யும் விதமாக மன்னர் சல்மான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி இளவரசருடன் இணைந்து அந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சிலரை கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு எதிரான சட்ட ஆணை வரும் வரை விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று மன்னர் சல்மான் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாக, சவுதி அரசின் நிதியுதவி பெறும் அல்-அரபியா செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை விமர்சிக்கும் குறிப்பிட்ட சமூக ஊடக பிரபலமான கென்னெம் அல்-துசாரி என்பவர், யூலை 19ம் திகதியன்று ஒரு திருத்தப்பட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில், சவுதி இளவரசர் பலரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, பெண்களையும், ஆண்களையும் அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ 2,600 முறை மறு டுவீட் செய்யப்பட்டது.
இதனிடையே தாக்குதல்கள் நடைபெற்றதாக காட்டப்படும் வீடியோ காட்சிகளில் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவர் இளவரசர்தான் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. மேலும், கடைசி காட்சியில் காட்டப்படும் வீடு இளவரசருடையதா? என்று கேள்வி எழுப்புபவர்கள், அந்த வீடு சாதாரண மக்களுடையதைப் போன்றே தோன்றுவதாகவும் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
வீடியோவை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும் கைது நடவடிக்கையை சவுதி ஊடகங்கள் உறுதிசெய்துள்ளன.