என் மீது அபாண்டங்களை சுமத்துகின்ற ஈனர்களே வெட்கப்பட்டு ஓட வேண்டும்!தேசிய காங்கிரஸின் வடக்கு நோக்கிய எழுச்சியையும், அதில் இவரின் பங்களிப்பையும் ஜீரணிக்க முடியாத அரசியல் கோழைகளால் பரப்பப்படுகின்ற வீண் அவதூறுகளுக்கு அஞ்சி அரசியலில் இருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டார் என்று இக்கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்தார்.

இவரை குறித்து பேஸ்புக் போன்ற சமூக இணைப்பு தளங்களில் அண்மைய தினங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசம பிரசாரங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கொழும்பில் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-


நான் அரசியலில் கற்றுக் குட்டி அல்ல. எனது 10 வருட கால அரசியல் வாழ்க்கை ஒன்றும் ரோஜா பூ மெத்தையும் அல்ல. வன்னி எனக்கு புதிய களமும் அல்ல. எனது மீளெழுச்சியால் அதிர்ச்சி பயம் பிடித்து உள்ள சில அரசியல்வாதிகளும், அவர்களின் அடியாட்களும் என்னை விரட்ட பார்க்கின்றனர். அதற்காக இல்லாத, பொல்லாத கதைகளை திட்டமிடப்பட்ட வகையில் கட்டி சமைத்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 


முதலில் என்னுடன் பேரம் 
பேசினார்கள். பின்னர் எனக்கு படுகொலை அச்சுறுத்தல்கள் விடுத்தார்கள். இப்போது அவதூறுகள் பரப்புகின்றார்கள். ஒரு பெண்ணுக்கு எதிராக என்னவெல்லாம் அவதூறு பண்ண முடியுமோ அதை எல்லாம் இந்த வீணர்கள் செய்வார்கள். அதற்காக நான் அரசியலில் இருந்து ஒதுங்க போவதே இல்லை. 

நான் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து வெறும் 40 நாட்கள் மாத்திரமே கழிந்து உள்ளன. இதற்குள்ளாகவே வன்னியின் சில அரசியல்வாதிகளுக்கு சன்னி காய்ச்சல் பிடித்தது போல ஆகி விட்டது. இது எனக்கு கிடைத்த முதலாவது மகத்தான வெற்றி ஆகும். நான் இவை போன்ற தடைக் கற்களை எல்லாம் படிக் கற்களாக்கி வட மாகாண அரசியலில் முதலாவது முஸ்லிம் சாதனை பெண் என்கிற மகுடத்தை அடைந்தே தீருவேன். எனக்கு இந்த வாய்ப்பை தந்திருப்பதற்காக தலைவர் அதாவுல்லாவுக்கு இத்தருணத்தில் எனது நன்றியறிதல்களை தெரிவித்து கொள்கிறேன். 

நான் அல்ல, என் மீது அபாண்டங்களை சுமத்துகின்ற அற்பர்களே வெட்கப்பட்டு ஓடி ஒளிக்க வேண்டும். பெண்கள் அவர்களின் இல்லங்களிலும் உள்ளனர். அவர்களுக்கான கூலியை இறைவன் நிச்சயம் வழங்குவான். எனது உண்மைத் தன்மையை உள்ளபடி புரிந்து நேரிலும், தொலைத்தொடர்பு மூலமாக உரையாடியும் ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது என்பதையும் அவர்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.