எரிபொருளை லங்கா IOC இல் பெறலாம்கனிய எண்ணெய்வள ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பிரதான வீதிகளில் எரிதிரவ நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டது. 
கனிய எண்ணெய் சார் தொழிற்சங்கத்தினர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தமக்கான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக தாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் டி,ஜே ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனிய எண்ணெய்வள ஊழியர்கள் நேற்று இரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள போதும் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பில்  எரிபொருள் விநியோகம் வழமை போல் இடம்பெறாததால் திருகோணமலையில் இருந்து எரிபொருள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கபடுவதாக அதன் நிர்வாக இயக்குநர் ஷாம் போரா குறிப்பிட்டுள்ளார்.

நாடு பூராகவும் உள்ள லங்கா ஐ ஓ சீ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை , அரச மருத்துவ அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
எனினும் இந்த போராட்டம் டெங்கு சிகிச்சை, புற்றுநோய் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தல் மற்றும் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.