ஜனாஸா அறிவித்தல்.சவூதி அரேபியாவில் தமாம் நகரில் காலமானதாக கூறப்படும் சாய்ந்தமருது, கபூர் வீதியைச் சேர்ந்த மொஹீதீன் சுலைமான் அப்துல் பரீத் என்பவரின் ஜனாஸா ஏறத்தாழ ஒரு மாதமும் இருபத்தைந்து நாட்களின் பின்னர் புதன்கிழமை (02) நண்பகல் லுஹர் தொழுகையையடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற அப்துல் பரீத் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைக்கு செலுத்த வேண்டியிருந்த சுமார் இரண்டு இலட்சம் ரியால்களை செலுத்தப்படாததன் காரணமாகவே அவரது ஜனாஸாவை அங்கிருந்து எடுத்து நல்லடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. 

இறந்தவரின் குடும்பத்தினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயத்தை கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் திருமதி தலதா அத்துகோரளவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்குள்ள தொழிலமைச்சினூடாக, ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஜனாஸா வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டு புதன்கிழமை லுஹர் தொழுகையை அடுத்து தமாமிலுள்ள ஜாமிஆ அல்மலிக் பஹ்த் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு மக்பரா மஸ்ரூயாஹ் மையவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அமைச்சர் ஹக்கீமின் பாராளுமன்றச் செயலாளர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.

பெண் பிள்ளைகள் இருவரினதும் ஆண் பிள்ளை ஒருவரினதும் தந்தையான காலம்சென்ற எம்.எஸ்.அப்துல் பரீட் சவூதி அரேபிய புகையிரத நிறுவனத்தில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் அங்கு அவர் 23 வருடங்காக பணியாற்றியதாகவும் ஏ.எம்.ஜவ்பர் மேலும் கூறினார்.