பட்டினியால் யெமனில் , 5 வயதுக்கு குறைந்த 2 லட்சம் குழந்தைகள் உயிராபத்தில்


யெமனிலுள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிவேகமாக குறைந்து வருவதாகவும் போசாக்குள்ள உணவு இல்லாமையே இதற்கான காரணம் எனவும் சர்வதேச  தொண்டர் அமைப்பான “சேவ் த சில்ரன்” கூறியுள்ளது.
இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் யெமனிலுள்ள  குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி  பலவீனமடைந்துள்ளது.  இதனால் அங்கு வாழும் குழந்தைகளுக்கு சாதாரண ஒரு தொற்று நோய் வந்தாலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் செய்துள்ள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், யெமன் நாட்டில் ஐந்து வயதுக்கும் குறைவான இரண்டு லட்சம்  குழந்தைகள் பட்டினியால் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வருடமாக நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக யெமன் நாடு பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், நாட்டின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.