ஆவாவைச் சேர்ந்த 7 பேருக்கும் வெள்ளி அணிவகுப்பு


யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரையும்,
எதிர்வரும் 25ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
பொலிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தீவிர தேடுதலின் போதே ஆவாக்குழுவைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 
அத்துடன், அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டன. 
சந்தேகநபர்களில் எழுவர், நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஆஜர்படுத்தப்பட்டதுடன், மீட்கப்பட்ட வாள்களும் மோட்டார் சைக்கிள்களும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. 
இந்நிலையிலேயே, இந்த ஏழுபேரையும், புதன்கிழமையன்று (23) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம், ஏற்கெனவே தீர்மானித்திருந்தது.  
அதனடிப்படையில், யாழ்.நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும், நேற்றையதினம் அடையாள அணிவகுப்பு இடம்பெறவில்லை. அவர்களை, எதிர்வரும் 25ஆம் திகதியன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, உத்தரவிட்ட மேலதிக நீதவான், அன்றைய தினம் வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.  
ஆவா குழுவைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அஜித் குமார் என்றழைக்கப்படும் துரைசிங்கம் ராஜ்குமார், எஸ்.ஆர் என்றழைக்கப்படும் ரவிந்திரன் ஸ்டாலிங்டன் மற்றும் கிஸ்பா என்றழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபாகரன் ஆகிய மூவரும், புதன்கிழமை (09) இரவு 7:35க்கு மல்லாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 
ஆவா குழுவின் பிரதித் தலைவர் என்று அறியப்பட்டுள்ள, நிஷா விக்டர் புறக்கோட்டை பகுதியில் வைத்தும், வினோத் என்றழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயகுமார், மட்டக்குளிய பகுதியில் வைத்தும், குலேந்திரன் மனோஜ், சிவசுப்ரமணியம் போல், இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குணதாஸ், யாழ்ப்பாணம், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரசன்னா ஆகியோர், யாழ்ப்பாணத்தில் வைத்தும், பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பிரிவினரால், ஞாயிற்றுக்கிழமையும் (06), திங்கட்கிழமையும் (07) கைது செய்யப்பட்டிருந்தனர்.  
ஆவா குழுவின் கொக்குவில் பிரதேசத்துக்கான தலைவர் என்று கூறப்படும் ரவிந்திரன் தருஷன் (வயது 19) என்பவரை விசேட படையணியினர் கடந்த 15ஆம் திகதியன்று கைதுசெய்தனர். 
இந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இதுவரையிலும் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழுபேரே, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.