கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்குபேர் படுகாயம்


கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதில், மகேந்திரா ரக வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சாரதிக்கு கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் பலத்த காயங்களும் காணப்படுகின்றன.  மற்றைய மூவரிற்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த நால்வரையும் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மிக வேகமாக  சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக பிக்கப், திரேசா ஆலயத்திற்கு முன்பக்கமாக விதியினை துவிச்சக்கரவண்டி குறுக்கறுத்ததினால்   சடுதியாக நிறுத்த முற்பட்டபோதே குறித்த வாகனம் தூக்கி  மறுபுறத்திற்கு வீசப்பட்டுள்ளது.
வீசப்பட்ட வாகனம்  டிப்போசந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த  பேருந்துடன் மோதுண்டுள்ளமை அருகில் இருக்கும் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியில் பதிவாகி உள்ளது.
விபத்தில் சிக்கிய மகேந்திரா பிக்கப் கிளிநொச்சியில் உள்ள உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இன்று காலை தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தினை வாங்கியவர்களும்  விற்றவர்களும் கரடிப்போக்கில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றிற்கு சென்று கொண்டிருக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.