Aug 29, 2017

சொத்துக்களை கொள்ளையடிக்க இடமளியேன்- முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்


மக்களுடைய  சொத்துக்களை சூறையாடுவதற்கோ கொள்ளையடிக்கவோ எவராவது முற்பட்டால்  கிழக்கின் முதலமைச்சராய் இருக்கும் வரை அதற்கு இடமளிக்க மாட்டோம் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார்.

யாராவது  மக்களுடைய சொத்துக்களை கொள்ளையடிக்கவோ ஊழல் செய்யவோ அல்லது  துஷ்பிரயோகம் செய்யவோ முற்பட்டால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்பட தயாராக உள்ளதாக கிழக்கு முதலமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

நேற்று ஏறாவூரில் மிச் நகர் பிரதான வீதி மற்றும் வடிகான் வீதி ஆகியவற்றை  கொங்கிரீட் வீதிகளாக புனரமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

மிச்நகர் பிரதான வீதி மற்றும் வடிகான் வீதி ஆகியனவற்றிற்கு  கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டினால் 40 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்படவுள்ளன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் ,

ஓட்டமாவடி பிரதேசத்தி்ல் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏழை மக்களுக்கு வழங்க 50 வீடுகள் வழங்கப்பட்ட போதும் அவற்றை நிர்மாணிக்க காணி இல்லாத காரணத்தினால் அவை மீள அரசாங்கத்துக்கே திருப்பிச் செல்கின்ற நிலை காணப்பட்டது,’
ஏனெனில் அவற்றை நிர்மாணிக்க வேண்டிய காணியை அரசியல்வாதியொருவர் மக்களுக்கு கிடைப்பதை தடுத்து வைத்திருந்த நிலையில் அதனை எனது தற்துணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு வாரங்களுக்குள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தேன்.

பின்னர் வெட்கமின்றி அதே காணிக்கு காலையிலேயே சென்று வீட்டுத் திட்டத்திற்கு சென்று அடிக்கல் நாட்டிய கேவலமான சம்பவம் நடந்தது,

நாங்கள் மக்கள் காணிகளை கையகப்படுத்தி சேவைகளை முன்னெடுக்கவில்லை,

கடந்த வாரம் ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலையொன்றை நான் திறந்து வைத்தேன்,அந்த ஆடைத் தொழிற்சாலை அமையப் பெற்றுள்ள இடமானது  எனது தாய் வாழ்ந்த இடம் .இருந்தாலும்  நமது பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று கஷ்டப்படக் கூடாது என்ற எனது இலட்சியத்தை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் நான் அர்ப்பணிக்க தயாராக உள்ளேன்.

அதே போன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை  எனது  சொந்த நிதியினால் நான் வாங்கிக் கொடுத்தேன்,

ஆகவே நாம் மக்கள் இடங்களை கையகப்படுத்தி எமது நெருங்கியவர்களுக்கு பினாமிகளுக்கோ வழங்காமல் எமது  காணிகளை நாம் மக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முற்படுகின்றோம்.

கடந்த 30 வருடமாக அரசியல் செய்கின்றவர்கள் ,ஒரு இராஜாங்க அமைச்சராக இருக்கின்றவர் காத்தான்குடி நகர சபைக்ககட்டடத்தை தான் கட்டியதாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுத் திரிகின்றார்.
30 ஆண்டுகால அரசியலில் இருக்கும் அவருக்குத் தெரியும் மத்தியரசின் ஒரு பணியை முடிப்பெதன்றால் பல்வேறு கடிதத் தொடர்புகள் இருக்கும்.நகர சபைக் கட்டடத்தை தான் நிர்மாணித்தமைக்கு ஆதாரமான ஒரு கடிதத்தை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.

அத்துடன் காத்தான்குடி நகர சபைக் கட்டடமோ ஏறாவூர் நகர சபைக்கட்டடமோ யாரின் முயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்டதல்ல,அவை நெல்சிப் எனப்படும் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகவே அதன் நிர்மாணங்கள் முன்னெடுக்கப்பட்டன,
அவ்வாறானால்  நெல்சிப் நிதியினால் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களும் நிர்மாணிக்கப்பட்டன,அவர்கள் அவ்வாறானால் அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது இதற்கு உரிமை கோரினார்களா???
அவ்வாறானால் நீங்கள் மாத்திரம் எவ்வாறு உரிமை கோரமுடியும்,


அத்துடன் இன்று நெடுந்தெருக்கள் சம்பந்தமாக உரிமைக  கோர வருகின்றார்கள்,நான் அவர்களுக்கு சவால் விடுகின்றேன் முடிந்தால் நெடுந்தெருக்கள் திட்டத்தில் ஒன்றை நிறுத்திக் காட்டுமாறு கேட்கின்றேன்.


கடந்த 30 வருடங்களாக இராஜாங்க அமைச்சராக இருக்கும் இவரால் கடந்த 30 வருடத்தில் காத்தான்குடி மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள் என்ற பட்டியலைக் காட்டுங்கள்,நான் கடந்த இரண்டு வருடத்தில்  தொழில் வாய்ப்புக்களை வழங்கிய  பட்டியலை காட்டுகின்றேன்

ஆகவே மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை விடுத்து ஆக்கபூர்வமான  முறையில் அரசியலை முன்னெடுத்து  சுயலாப அரசியலை முன்னெடுக்க வேண்டாமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்,SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network