Aug 21, 2017

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் பலி



ஊவா பரணகமை திம்புலன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஊவா பரணகமை திம்புலன பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் 19.08.2017 அன்று இரவு வீட்டிற்கு வந்த பெண்ணின் காதலன் குறித்த பெண்னை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன் கணவர் வருகை தருவதை கண்டு ஓடியுள்ளதாக பொலிஸாரிடம் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

19.08.2017 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெரும் போது குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளதுடன் பிள்ளைகள் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்துள்ளனர்.

குளறுபடியான சம்பவத்தை தீர்ப்பதற்கென பதுளை மாவட்ட பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தமது விசாரணையை பொலிஸார் முன்னெடுத்தனர். இதன் பயனாக சுமார் 1.5 கிலோ மீற்றர்கள் தூரம் சென்ற மோப்ப நாய், 37 வயதுடைய சந்தேக நபரின் வீட்டை சென்றடைந்தது.

எனினும் சந்தேக நபரும் அவரது மனைவியும் பிரதேசத்தை விட்டு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை குறித்த சந்தேக நபரின் வீட்டின் முன் சுவற்றில் இரத்தம் படிந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது. சந்தேக நபர் 03 பிள்ளைகளின் தந்தையாவார். மரண விசாரணைகள் வெலிமடை நீதவான் முன்னிலையில் நடைப்பெற்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் முதலாவது பிள்ளை 20.08.2017 அன்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.





SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network