இலங்கை கிரிக்கெட் பேரழிவை நோக்கி செல்கிறது: ரணதுங்கா

இலங்கை கிரிக்கெட் பேரழிவை நோக்கி செல்வதாக அந்த அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற செட் கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அந்த அணியின் முன்னாள் தலைவர் ரணதுங்கா பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். எப்போதாவது வேண்டுமானால் பார்ப்பேன்.
நாளிதழ்களை படித்து அது குறித்து தெரிந்து கொள்வேன். கடைசியாக நடந்த கிரிக்கெட் நிர்வாகிகள் தேர்தல் எனக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதில் தேவையில்லாத ஆட்கள் எல்லாம் நுழைய பார்க்கிறார்கள். இது குறித்து நான் பலமுறை பேசியும் அதை யாரும் காதில் வாங்கி கொள்ளவில்லை.
நான் இலங்கை கிரிக்கெட் வீரர்களை குறை சொல்லவில்லை. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தான் தவறு செய்கிறது.
இப்படியே சென்றால் இலங்கை கிரிக்கெட் பேரழிவை நோக்கி தான் செல்லும். அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது. இனியும் மெளனமாக இருக்க கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் குறித்து பேசுகிறேன்.