கட்சி மற்றும் இன மத பேதமின்றி ஆட்சியை முன்னெடுக்க தெற்கில் கிழக்கு முதல்வர் பெருமிதம்,


மொழி ,இனம் ,கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி ஆட்சியொன்றினை முன்னெடுக்க முடியும் என்பதை முழு நாட்டிற்கும் தாம் நிரூபித்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட் தெரிவித்தார்,

இலங்கையின் பிரதான கட்சிகளான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கியத் தேசியக் கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன  இணைந்து கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் கூட்டாட்சி அரசாங்கம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிணாமாகும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பாரிய  வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட தெனியாய பகுதி மக்களின் வீடுகளை புனரமைப்பதற்கான கட்டடப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு உயர் அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்,

இதன் போது 9 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் தெனியாய பகுதியில் வௌ்ளத்தின் போது வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டன,
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

இன்று தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  ஆகியனவும் எதிர்க்ட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை நடத்தி வருகின்றோம்,
இந்த ஆட்சியை நாம் ஏற்படுத்திய போது இரண்டு மாகாண சபை அமர்வுகளை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு எமக்கு சவால் விட்டார்கள்,

ஆனால் இன்று இரண்டுகளாக நாம் இந்த ஆட்சியை எந்தப் பிரச்சினைகளுமின்றி முன்னெடுக்கின்றோம்.

அவ்வாறு எம்மிடையே பிரச்சினைகள் வந்த போதிலும் அவற்றை நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்க்கின்ற அரசியல் கலாசாரத்தையே நாம் பேணி வருகின்றோம்,
ஆகவே ஊழலற்ற வௌிப்படைத் தன்மையுள்ள மற்றும் செயற்திறன் மிக்க ஆட்சியொன்றை எம்மால் இலகுவாக முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது,

அது மாத்திரமன்றி கிழக்கில் வாழும் மூன்று இனங்களிடையேயும் விரிசல்களை ஏற்படுத்த முனைவோர் மீதும் நாம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கிழக்கில் சிறுபான்மை பெரும்பான்மையென யாரும் இல்லை எல்லோரும் இலங்கைத் திருநாட்டின் மக்கள் என்ற வகையிலேயே நாம் ஆட்சியை முன்னெடுக்கின்றோம்,

அது மாத்திரமன்றி இவ்வாறான கூட்டாட்சியை நாம் ஏற்படுத்துவதற்கு எமக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.