Aug 19, 2017

பதவியைப்பறிப்பதற்கு பல முனைகளிலும் சதி முயற்சிகள். வவுனியாவில் அமைச்சர் றிஷாட்


 நாங்கள் நிர்மாணித்த கட்டிடங்களையும் பாலங்களையும் எங்களுக்குத் தெரியாமல் அங்குரார்ப்பணம் செய்து வைத்துவிட்டு, அந்த நிகழ்விலேயே எங்களை விமர்சிக்கும் அரசியல் வங்குரோத்துத்தனம் சில அரசியல்வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா சாளம்பைக்குளம் ரஹ்மதுல்லா ஜன்னா பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (18.08.2017) இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

அவர் உரையாற்றிய போது தெரிவித்ததாவது,
எனது அமைச்சுப் பதவியை பறித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முனைகளிலும் சதி வேலைகள் இடம்பெற்று வருகின்றன. என்னை ஓரங்கட்டினால் தாங்கள் விரும்பியபடி அரசியல் நடாத்த முடியும் என நினைத்து இயங்குகின்றனர். நமது சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இவ்வாறான சதிவலைக்குப் பின்னால் இருக்கின்றனர். அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை பாராளுமன்றத்தில் ராஜினாமா செய்த அன்று, அவருக்கு அடுத்த ஆசனத்தில் நான் அமர்ந்திருந்த போது, அமைச்சர் ஒருவர் என்னிடம் வந்து, மூன்று வருடங்களுக்கு முன்னரே உங்கள் அமைச்சுப் பதவியையும் பறிக்க வேண்டும் என சிலர் கங்கணம் கட்டி நிற்பதாக என்னிடம் தெரிவித்தார்.

நாங்கள் நினைத்துப் பாராத வகையில் எங்களை நோக்கி பல முனைகளிலும் அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்யாத குற்றங்களையெல்லாம் என்மீது சாட்டி அபாண்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சதிகளே சிலரின் வாழ்க்கையாக மாறி இருக்கின்றது. இவர்கள் திருந்த வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அரசியல் அதிகாரங்கள் இருப்பதால் நாம் சமூகத்துக்காக பணியாற்ற முடிகின்றது. 

சாளம்பைக்குள கிராமம் வளமான கிராமம். ஒற்றுமைக்கு இந்தக் கிராம மக்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இவர்களுக்கு குடியிருப்புக் காணிகள் பெறுவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. இங்கே 100 வீடுகளைக் கொடுத்ததற்காக நானும் அதிகாரிகளும் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தோம். எனது கொடும்பாவி கூட எரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த கிராமத்துக்கு மேலும் 50 வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின்சார வசதியை விரைவில் பெற்றுத் தருவோம்;. அபிவிருத்திக்கென நாம் 66 இலட்ச ரூபாய்களை ஒதுக்கி வேலைகள்; இடம்பெறுகின்றன. இதனை மேலும் 40 இலட்சமாக அதிகரித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். தற்போதைய கால கட்டத்தில் தொழில்வாய்ப்பு பாரிய சவாலாக இருக்கின்றது. எனினும் படித்தவர்களுக்கு பட்டதாரிகளுக்கும் கட்டம் கட்டமாக தொழில்களை வழங்குவோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரசின் செயலாளர் சுபைதீன், அமைச்சரின் பொது சனத் தொடர்பு அதிகாரி மொஹிதீன், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான முத்து முகம்மது, கலாநிதி மரைக்கார், பாரி, முஜாஹிர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network