ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை இயல்பு நிலைக்கு மாற்ற ஆளுனரிடம் வேண்டுகொள்எம்.ஜே.எம்.சஜீத்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை இயல்பு நிலைக்கு கொண்டுவர கிழக்கு ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: சுபையிர்MPC வேண்டுகோள்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் இருக்கத்தக்க புதியதொரு வைத்திய அத்தியட்சகரை நியமனம் செய்திருப்பதனால் அவ்வைத்தியசாலையின் நிருவாக நடவடிக்கைகள் சீர்குழைந்து காணப்படுகிறது. 

எனவே அவ்வைத்தியசாலையின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்குறித்த விடயமாக கிழக்கு மாகாண ஆளுநரை இன்று (2) கொழும்பில் சந்தித்த போதே மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் மாகாண சபை உறுப்பினர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் தாரிக் என்பவருக்கு இடமாற்றம் வழங்காமல் செங்கலடி வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் பழில் என்பவர் கடந்த 25ஆம் திகதி முதல் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தற்போது டாக்டர் பழில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் டாக்டர் தாரிக்கை இடமாற்றம் பெற்று செல்ல வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வைத்தியசாலையில் இருவர் வைத்திய அத்தியட்சகர்ளாக இருந்துகொண்டு நிருவாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளினால் வைத்தியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும், எதிர்கொள்ளும் நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களும் நாளுக்கு நாள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். சுகாதாரத்துறைக்குள்ளும் நிலவுகின்ற அரசியல் தலையீடுகளினாலே இவ்வாறான நிலைமைகள் தோன்றியுள்ளது.

 எனவே கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். முதலமைச்சர் ஆசிரியர்கள் மீது தலையிடுவது போன்று வைத்தியர்களிலும் தலையிடுகிறார். அண்மையில் வைத்தியர்கள் சங்கம் தொடர்பிலும் முதலமைச்சர் மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக வைத்தியர்கள் நாளை வீதிக்கு இறங்கினால் கிழக்கு மாகாண சுகாதார துறை மேலும் மோசமடையக்கூடும் இதனை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கொண்டு சென்றுள்ளேன். எனவே கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் வைத்திய அத்தியட்சகர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினையை சீர்செய்து வைத்தியசாலையின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.