பரீட்சை மண்டபங்களில்: மோசடிகளை கண்டறிய புதிய கருவிகள்
பரீட்சை மண்டபங்களில், பரீட்சார்த்திகள் தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதை கண்டறியும் வகையில், புதிய வகையான கருவிகளை பயன்படுத்துவது தொடர்பில், பரீட்சைகள் திணைக்களம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது.
அந்த கருவிகளை, பரீட்சை மண்டபத்தில் பொருத்தாமல், பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்குவதன் ஊடாக, இவ்வாறான மோசடிகளை கண்டறியலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  
பரீட்சார்த்திகள், பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கு முன்பு பாதுகாப்பு படையினரை கொண்டு, நவீன தொழில்நுட்பக் கருவிகள் பரீட்சார்த்திகளிடம் உள்ளனவா?என்பது குறித்து சோதனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.  
நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையில், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவன் ‘புளுடூத்’ வசதியுடன் பரீட்சை எழுதியுள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டது.  
அதனையடுத்தே, பரீட்சைகள் திணைக்களம் இந்தப் புதிய வகையான கருவிகள், தொடர்பில் அவதானம் செலுத்திவருகின்றதாக அறியமுடிகின்றது.   
நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள தகவல் தெரிவிக்கின்றது