அரச சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தில் இருப்பது குறித்து தீர்மானிப்பேன்- சுசில்

நான் இந்த அரசாங்கத்தில் ஏமாற்றத்துடன் தான் உள்ளேன் எனவும், நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா என்பது குறித்து விரைவாக தீர்மானம் எடுக்கவுள்ளேன் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
தான் சொல்லும் கருத்துக்களைக் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைமை கட்சிக்குள் உருவாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்துக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளதாகவும் அவை முகாமை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.  இந்த அரசாங்கம் நாட்டு மக்களின் பிரபல்யத் தன்மையையும் இழந்துள்ளது. இதனை எதிர்வரும் தேர்தலின் போது காணலாம்.
அரச சொத்துக்களை விற்பனை செய்வது என்ற கொள்கையுடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரச நிறுவனமொன்றை இலாபம் உழைக்கச் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டு இறுதித் தீர்வாக அதனை குத்தகைக்கு கொடுப்பதை தீர்மானிக்கலாம். ஆனால், இந்த அரசாங்கம் எடுத்த எடுப்பிலேயே விற்பனை செய்யவே பார்க்கின்றது.
நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்திற்குள் இருந்து இதனைக் கூறுகின்றேன். நாம் அரச சொத்துக்களை விற்பனை செய்தல் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள். இன்று கட்சியிலுள்ள சிலர் கட்சியின் கொள்கை தெரியாது செயற்பட்டு வருகின்றனர். தனக்கு இவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும், விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.