தற்பொழுது நிந்தவூரிலும் அரச 'ஒசுசல'


சுகாதார, சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களின் அயராத முயற்சியினால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 'ஒசுசல' எனும் மருந்து விற்பனை நிலையம் ஒன்று நிந்தவூர் பிரதேசத்தில் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. 

நிந்தவூர்-25, பிரதான வீதியில் முபாஸ் பூட் சிட்டிக்கு வடக்குப்புறமாக உள்ள கட்டிடத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தை சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் நிறுவப்படுகின்ற முதலாவது 'ஒசுசல' இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் மேலும் இரண்டு இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விரைவில் 'ஒசுசல' நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.

தரமான மருந்து பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்யக்கூடிய ஒசுசல நிலையம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வருகின்றது. தற்போது அம்பாறை நகரில் மாத்திரமே இந்நிலையம் இயங்கி வருவதனால் இப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்த பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களுக்கு தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.