வரவு செலவு திட்டத்தின் பின் மடகும்புரவில் ஐந்து தோட்ட பிரிவு மக்களுக்கும் தனிவீடுகள் அமைத்து கொடுக்கப்படும் - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு


நான் பிறந்த மண்ணுக்கு வீடுகள் இன்னும் கட்டிக கொடுக்கவில்லை என பலர் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் இந்த வரவு செலவு திட்டம் நிறைவுபெற்ற உடன் வட்டகொட மடகும்புர ஐந்து பிரிவுகளுக்கும் தனித் தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தலவாக்கலை மடக்கும்புர பகுதியில் நேற்று 20.08.2017 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையம் மற்றும் மடக்கும்புர தோட்டத்திற்கு செல்லும் 15 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கபட்ட வீதி ஆகியன திறந்து வைக்கப்பட்டதுடன், 23 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள வைத்தியசாலை வீதிக்கு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, ஆர்.ராஜாராம், எம்.ராம், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

நாங்கள் இந்த மண்ணில் பிறந்து உங்களுக்கு வீடுகள் கட்டிகொடுக்கவிட்டால் எங்கள் மீது உள்ள கோபத்திற்காக யாரும் உங்களுக்கு எந்த ஒரு அபிவிருத்தியும் செய்து கொடுக்கமாட்டார்கள். நாங்கள் இருக்கும் போதே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோம். அத்தோடு 2020ம் ஆண்டு வரும் போது 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுப்பேன்.

எனவே எனக்கும் திலகராஜ் அவர்களுக்கும் வேலை செய்யுங்கள் சகலவற்றையும் நாங்கள் செய்துகொடுப்போம்.

ஒரு சிலர் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கு நிறைய வேலை செய்துள்ளது. மலையக மக்களை மதித்தது இந்த அரசாங்கம் முதல் முதலாக காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொடுத்தது. எனவே மலையக மக்கள் எவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மறந்து விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.