முதலீட்டாளர்களிடையே அவநம்பிக்கை ஏற்படவில்லை


திறைசேரி முறி விவகாரம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தவில்லையென மத்திய வங்கி ஆளுநர் டொக்டர்இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
"முதலீட்டாளர்கள் பத்திரிகை தலைப்புச் செய்திக்கும் மேலதிகமாக நாட்டின் நிலவரங்கள் தொடர்பில் அறிந்து வைத்திருப்பர் என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் நாணய கொள்கை விமர்சனம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு கூறினார்.
"அரசாங்கத்தின் ஏலம் விடும் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக ஆரம்ப காலம் முதல் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முறைமை மற்றும் ஊழியர் சேம இலாப நிதியத்தின் நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இலங்கையில் முதலீடு செய்ய முயற்சிப்போர் அறிந்து வைத்துள்ளனர்." என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையிலான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இதே நாணயமாற்று கொள்கையை தொடர்ந்தும் பின்பற்றுவதற்கே மத்திய வங்கி விரும்புகிறதென சுட்டிக்காட்டிய ஆளுநர், எதிர்பார்த்த அளவிலும் வளர்ச்சி வீதம் குறைவாக இருப்பதனால் வட்டி வீதத்தை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லையென்றும் அவர் கூறினார்.
இவ்வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தை மீறிச் செல்வதற்கு வாய்ப்பில்லையென்றும் அவர் கூறினார்.
"பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எமக்கு முதலீடு அவசியம். அதற்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை. முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைக்கக்கூடிய சூழ்நிலை மற்றும் நம்பிக்கையை நாம் இங்கு உருவாக்க வேண்டும்." என்றும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு முதலீட்டாளர்களிலும் பார்க்க வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு சற்று அதிகரித்து வருவதனை அண்மைக்காலமாக அறிய முடிந்துள்ளது. சில நேர்மறையான சமிக்ஞைகளை இங்கு காணக்கூடியதாக உள்ளது.மேலும் பல நிலையான வைப்புக்கள் நாட்டுக்குள் வரவேண்டும் என நாம் விரும்புகிறோம்." என்றும் அவர் தெரிவித்தார்.