மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு- பிரதி அமைச்சர்

மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்தளை விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 40 லட்சம் ரூபாய். அதற்கான செலவு 250 லட்சம் ரூபா. ஒரு நாளைக்கு 3 விமானங்களே பறக்கின்றன. ஒரு மாதத்துக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.
வருடத்துக்கு 360 கோடி ரூபா வீதம் எட்டு வருடங்களுக்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த விமான நிலையத்தை அமைக்க ராஜபக்ஷ அரசாங்கம் 4000 கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. அரசாங்கத்துக்கு மேலும் இந்த கடன் சுமையை தூக்கிப் பிடிக்க முடியாது. இதனாலேயே இவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.