சட்டவிரோத பொருட்களை அகற்ற போதிய அதிகாரம் இல்லை: விஜயதாச



பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவது தொடர்பில் புதியதொரு சட்டம் விரைவில் கொண்டுவரப்படவிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். நாட்டுக்குள் கடத்தப்படும் பல்வேறு சட்டவிரோத பொருட்கள் பிடிபடுகின்றபோதும் அவற்றை அகற்றுவதற்கான நடைமுறையொன்று இல்லை. இந்த நடைமுறை நீண்டகால தேவையாக உள்ளது. . இதனை நிவர்த்தி செய்யும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவிருப்பதாக  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டுவரப்பட்டதுடன், இதற்கான பொறிமுறை சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறு மீட்கப்படும் சட்டவிரோத பொருட்களை நீக்குவதற்கு உரிய சட்டம் இல்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ: கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அகற்றுவதற்கான பொறிமுறையொன்று தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. பறிமுதல் செய்யப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்டும் போதைப் பொருட்களை கையாள்வது குறித்த பொறிமுறை மற்றும், இதற்கு தேவையான சட்டத்தை தயாரிப்பதற்கு மூவர் அடங்கிய குழு என்பன அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமான கடத்தல் பொருட்களை நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் வைப்பதற்கான புதிய முறையொன்று கொண்டுவரப்பட வேண்டும்.
இதுதொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவானது பொலிஸார், அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை நடத்தி அதற்கான கட்டமைப்பொன்றை முதலில் ஏற்படுத்துவர். ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் பின்னர் சட்டவரைபுக்கான செயற்பாடுகளில் அக்குழு ஈடுபடும்.
மூவரடங்கிய குழு இது குறித்து அண்மையில் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருந்தது. இதன் இலக்கை அடைவதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்றார்.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்‌ஷ, சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.