ஐ.தே.க.யில் திருடர்கள் வெளியேற்றப்படுவார்கள்- ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சி அல்லவெனவும், அவ்வாறு இக்கட்சியில் திருடர்கள் இருப்பதாயின் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் டீ.கே.டபிள்யு. கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
இன்று அமைச்சர்களை அழைத்து சட்ட மா அதிபர் விசாரணை செய்யும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு முன்னைய அரசாங்கங்களில் இவ்வாறான ஒரு நிலைமை இருக்கவில்லை. அக்காலத்தில் இருந்த சட்ட மா அதிபர் ஜனாதிபதியின் ஊழியராகவே செயற்பட்டார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வினவிய சட்ட மா அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்பொழுது வேண்டிய ஒருவருக்கு அரசாங்கம் குறித்து கேள்வி கேட்க முடியும். நான் ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்கின்றேன். இந்த அரசாங்கம் திருடர்களுக்கு பாதுகாப்பு வழங்காது. எந்தவொரு விடயம் தொடர்பிலும் உண்மைகள் வெளிவந்தால், அது தொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்போம்.
ஐ.தே.க. திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருந்தால், பகிரங்கமாக அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனவும் பிரதமர் மேலும் உறுதிபட கூறியுள்ளார்.