Aug 22, 2017

மீராவோடையா? முறாவோடையா? - வரலாறு சொல்வதென்ன?


எம்.ரீ. ஹைதர் அலி

அண்மைக்காலமாக மீராவோடையா? முறவோடையா? என்ற மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதை நாமறிவோம். இது தொடர்பிலான தெளிவினை நாமனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தேவை எமக்குள்ளது இது நிதர்சனமான உண்மையாகும்.

அண்மைக்காலமாக தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கெதிரான காலாச்சார, பாரம்பரிய, மார்க்க விடயங்களில் பல்வேறு நெருக்குதல்கள் பெளத்த கடும் போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சகோதர இனமான தமிழர் தரப்பிலுள்ள ஒரு சிலரும் சில அற்ப சொற்ப எதிர்கால அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களை காணி பிடிப்பவர்களாகவும், அத்துமீறி நுழைபவர்களாகவும் சித்தரித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்து வருவதுடன், சில இடங்களில் பெரும்பான்மை இன பெளத்த துறவிகளின் துணையுடன் சிறுபான்மையான தமிழர்கள், சிறுபான்மையான முஸ்லிம்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களையும் அதனூடாக சட்ட நடவடிக்கையென்ற பெயரில் பொய் வழக்குகள் எனப்பல்வேறு வழிகளில் இன்னல் கொடுத்து வருவது நடந்தேறி வருகின்றது.

இதன் தொடரிலேயே குறித்த மீராவோடை பிரதேச எல்லைப்பகுதியிலும் முஸ்லிம்கள் பரம்பரையாகக் குடியிருக்கும் காணி மீராவோடை தமிழ் பகுதியிலுள்ள சக்தி வித்தியாலயத்துக்குச் சொந்தமானது என்று கூறி அங்கிருந்து அந்த முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட்ட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.

குறித்த காணிப்பிரச்சினை தொடர்பில் நாம் பல நியாயபூர்வமான ஆதாரப்பூர்வமான செய்திகளை நாம் வெளியிட்டுள்ளோம். அந்தக்காணி யாருக்கு சொந்தம் என்பன தொடர்பில் பல தசாப்த கால ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சினை இவ்வாறிருக்க, இக்காணி தங்களுக்குரியது. இதற்கு முஸ்லிம்கள் உரிமை கொண்டாட முடியாது. அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு ஆட்சி புரிகிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் உறுதிப்படுத்த மீராவோடை எனும் தமிழ், முஸ்லிம் பிரதேசத்தை தங்களுக்கு மாத்திரம் உரியது. மீராவோடை எனும் பெயர் முஸ்லிம்களால் அண்மைக்காலங்களில் தான் ஏற்படுத்தப்பட்டது. அதன் பெயர் முறாவோடை தான் என வரலாற்றுத் திரிபை ஏற்படுத்த முனைகின்றனர்.

இவ்வாறான பல்வேறு பரப்புரைகளை முன்வைத்து மீராவோடை எனும் முஸ்லிம் பாரம்பரிய பூர்வீகத்தை தமிழர் பிரதேசமாகக் காட்ட முனைவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

உண்மையில், மீராவோடை என்ற நாமத்துக்கு வயது நூற்றாண்டு கடந்தது என்பதை பல்வேறு ஆதாரங்கலூடாக நாம் முன் வைக்க முடியும். அதே நேரம், முறாவோடை என்ற பெயர் வருவதற்கான காரணத்தை இதுவரை எவரும் முன் வைத்ததாக இல்லை. அர்த்தங்கள் இல்லாமல் ஊருக்கு பெயர் வருவதில்லை. அதே நேரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தப்பெயரைத் திணிப்பதில் மும்முரமாக இருப்பதாக தெரிகிறது.

அவர் முன் வைக்கும் ஆதராம் என்பது வாய்மொழி மூலமாக அவருக்கு கிடைக்கப்பெற்றதாக இருக்கலாம். இருப்பினும், சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் தபால் அமைச்சராக இருந்த நல்லையா மாஸ்டர் என்பவரால் அமைக்கப்பட்ட தபாற்கந்தோரின் (இன்று வரையும் மீராவோடை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இதுவே தபாலகம்) பெயர்ப்பலகையிலும் ((Miravoda) அதற்கும் மேலாக சுமார் 132 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை ஆண்ட ஆங்கிலேயரின் பிரதிநிதி ஒப்பமிட்டு கச்சேரியால் பதின்மூன்று ரூபாய்க்கு 1885ஆம் ஆண்டு பக்கீர் பிள்ளை என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பத்திலும் மீராவோடை (Miravodai) என்றே எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல ஆதாரப்பூர்வமான ஆதாரங்கள் தெளிவாக இருந்தும், முஸ்லிம்களின் பாரம்பரிய மண்ணை முறாவோடை எனப்பெயர் மாற்றம் செய்வதனூடாக அதற்கு தமிழர் பாரம்பரியப்பூமி எனக்காட்ட முயல்வதும், அவர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த மண்ணை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளார் என இப்பிரதேச முஸ்லிம்களைக் காணி பிடிப்பாளர்களாகக் காட்ட முயல்வது வரலாற்றைத் திரிவுபடுத்தி, ஒரு சிறுபான்மை மற்றொரு சிறுபான்மையை அடக்கி ஆளவும், துரத்தி மண்ணைக் கைப்பற்றிக் கொள்ளவுமான சதி முயற்சியாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

 .


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network