முஸ்லீம்களின் உரிமை பாதுகாப்பில் உறுதியில்லை:மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்


முஸ்லிம்களுடைய உரிமைகள் இந்த ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அல் - இக்பால் வித்தியாலய புதிய வகுப்பறைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டு நகர்வுகளை உற்று நோக்கும் பொழுது, முஸ்லிம்களுடைய உரிமைகள் இந்த ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் அரசியலில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தமது அந்தஸ்தை இழந்து விடாமல் கல்வியில் மாத்திரம் முதலீடு செய்து அதனூடாக அனைத்து உரிமைகளையும் அடைந்து கொள்ளப்பாடுபட வேண்டும்.
கல்வி அறிவின் மூலமாக ஒட்டு மொத்த இந்த நாட்டுக்கே உயிரோட்டத்தை வழங்க முடியும். இன, மத, பேதமற்று முழுநாட்டுக்கும் சேவை செய்கின்ற சமூகமாக முஸ்லிம்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபை உட்பட வேறு எதுவாயினும் ஆட்சி அதிகாரம் மீண்டும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.
ஆனால் அதனை மாத்திரம் நம்பியிராது கல்வி மூலமாக நிர்வாக அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்ள முஸ்லிம்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
அரசியல் அதிகாரம் கிடைக்காவிட்டாலும் அதனையிட்டு அலட்டிக் கொள்ளாமல் நிர்வாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் இந்த சமூகம் அக்கறை காட்ட வேண்டும்.