இலங்கை கிரிக்கட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு புதிய வேலைத்திட்டம்


கிரிக்கட் விளையாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு கிரிக்கட் விளையாட்டுடன் சம்பந்தமான அனைவரினதும் ஆலோசனைகளை பெற்று வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பாக இடம்பெறவுள்ள செயலமர்வில் இத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் கலந்து சிறப்பிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
மேலும் நாம் ஏற்பாடு செய்துள்ள இச் செயலமர்வானது அரசியல் ரீதியானது அல்ல என்றும் இச் செயலமர்வில் எட்டப்படும் தீர்மானத்தை கொண்டே வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி வீதியில் விமர்சிப்பதால் எந்த பயனும் கிடைக்காது என்றும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அச் செயலமர்வில் கலந்து தமது ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் வேண்டிக் கொண்டார்.
முன்னாள் கிரிக்கட் சபை உறுப்பினர்கள், கிரிக்கட் வீரர்கள், புத்திஜீவிகள், கிரிக்கட்டில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எமது நாட்டின் கிரிக்கட் விளையாட்டை சரியான வழியில் முன்னெடுப்பதே இதன்நோக்கமாகும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.