சகல கலா வல்லவர் ஒருவரை நாடும், முஸ்லிம் சமூகமும் இழந்துவிட்டது.
( ஐ. ஏ. காதிர் கான் )

நாட்டின் மிகப் பிரபல்யம் வாய்ந்த மூத்த அரசியல் வாதிகளுள் ஒருவரான, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரின் திடீர் மறைவு, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
   அமைச்சர் விடுத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
   மறைந்த மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர், கிராமிய மட்டத்திலிருந்து அரசியலில் நுழைந்தவர். ஒரு தேசிய அரசியல் வாதியாக அவர் திகழ்ந்தார். அன்னாரது அரசியல் வாழ்க்கை, பல கோணங்களிலும் எடுத்துப் பார்த்தால், மிகவும் வியக்கத்தக்கது. அவரிடம் மூன்று மொழிகளின் ஆளுமை இருந்தது. தலைமைத்துவம், உறுதிப்பாடு, அசையாத நம்பிக்கை கொண்டவராக அவர் அரசியலில் மிளிர்ந்தார். எந்தப் பணிகளையும் சளைக்காது மேற்கொள்ளும் ஆற்றல், திறமை அன்னாரிடம் இருந்தது.
   அவர் ஒரு சமூக ஜோதி. சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பால், அரசியலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதன்படி அவரது வாழ்விலும் எடுத்து நடந்தார்.
   அவரிடம் பல தகைமைகள் இருந்தன. அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளர், பேச்சாளர், மொழி பெயர்ப்பாளர், உரைகள் தொகுப்பாளர் என, அவரது ஆற்றல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
  வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார். அவர்களுடன் சிநேகித தோழமைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். குணம், நலம், பண்பாடு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும், நான்கு பேருடன் நன்றாகப் பழகும் சுபாவமுடையவராகவும் அன்னார், அவரது வாழ்நாளில் கடைபிடித்தொழகினார். ஒட்டு மொத்தத்தில், சகல கலா வல்லவர் ஒருவரை, இந்த நாடும் முஸ்லிம் சமூகமும் இழந்துவிட்டுள்ளது என்பதை, உளப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
   அன்னாருக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ், சொர்க்கத்தில் ஜன்னதுல் பிர்தெளஸை வழங்குவானாக. அன்னாரைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )