Aug 10, 2017

மீட்டுத் தாருங்கள் எனது பாடசாலையை


நிச்சயம் இது சல சலப்பை ஏற்படுத்தலாம்.குறைகளை கிளறுவதாகவும் அதை சமூகத் தளத்தில் பகிரங்கப்படுத்துவதாகவும் கூட பலர் வசை பாடலாம்.ஆனால் எனது செய்கையால் ஏதோ ஒரு விடியல் வர வேண்டுமென்பதற்கான சிறு முயற்சியே இது.யாரோ ,எப்படியாவது பேசத் தொடங்க  வேண்டிய விடயத்தை நானே தொடங்குகிறேன் என்ற அசட்டுத் துணிச்சலும் தான்.விமர்னங்கள் கடந்து தன் பாடசாலை தலை குனியக் கூடாதென்ற பழைய மாணவி ஒருவரின் யாசகம் என்று திறந்த மனதுடன் வாசியுங்கள்.

ஒவ்வொரு சமூகத்தினதும் விடியலில் கல்வியின் பங்களிப்பு அளப்பறியது.ஒரு ஆணின் கல்வி அவனுக்கும் பெண்ணின் கல்வி அவளது குடும்பத்திற்குமானது என்பது முதுமொழி.அதற்கொப்ப தான் அன்றே தீர்க்க தரிசனமாய் #Sir_Razik_Fareed என்ற நல்லுள்ளம் தன் சொந்த காணியில் #முஸ்லிம்_பெண்களுக்கான ஒரு பாடசாலையை நிர்மாணித்தார்.அவரது செயலை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.!

ஆனால் அந்த பாடசாலையின் நிலை பூரிப்பாய் சொல்லுமளவில் இல்லையென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நான் பேசுவது பம்பலபிட்டிய #MUSLIM_LADIES_COLLEGE  பற்றியேதான்...
மண்டபத்திற்கு அவரது உறவினரின் பெயரை சூட்டி,இல்ல விளையாட்டுப் போட்டியில் உறவினர் பெயர் சூடிய கொடிகளை பறக்க விடுவதும் தான் அன்னாரது  கனவு என்றால் அது நிறைவேறி விட்டது தான்.

240/250 மாணவியர் தோற்றி புலமைப் பரிசில் பரீட்சையிலும் சாதாரண தரத்திலும் ஏதோ கொஞ்சமாய் சித்தியடைய தலைநகரில் தலைநிமிர்ந்த முஸ்லிம்  பாடசாலை என்ற நாமம் தேவையில்லை.

பல்கலைக்கழக நுழைவு பற்றியும் கூட ஏற்குமளவு தரவுகள் தெரியவில்லை.
வருடம் பிறக்க முன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடவும்,ஆசிரியர் தின,மாணவர் தின,ஏன் காதலர் தினக்  கொண்டாட்டங்களுக்கும் private tuitories போதாதா?நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது தான் படிப்பென்றால் அதே கொழும்பில் British counsil,Aquinas என்பன இல்லையா எங்கெங்கோ கடைவிரித்திருக்கும் international பாடசாலைகள் போதாதா?
கல்வியேன்பது ஆங்கிலமும் நாகரீகமும் (?) அல்ல.வாழ்க்கைக்கான போதனை.அதை தர அனுபவங்கள் சில வேளை போதுமானதாக இருக்கலாம்.ஆனால் ஒழுக்க விழுமியங்கள் அங்கே சேரும் போதுதான் கல்வியின் தரம் உயர்ந்து நிற்கிறது.

அதனால் தான் ஒவ்வொரு மதத்தினருக்கும் தத்தமது மார்க்க போதனைகளை பிரயோக ரீதியாக போதிப்பதற்கு மத ரீதியான தனித் தனி பாடசாலைகள் நிறுவப் பெற்றன.

காலையில் கிராத் ஓதி கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதும் மதியம் ஸலவாத்துடன் நிறைவு செய்வதும் மட்டும் தானா முஸ்லிம் பாடசாலை என்பதற்கான அடையாளம்?
ஹிதாயத்தை தர அல்லாஹ்வே வல்லவன் என்று மனங்களை ஆற்றிக் கொண்டு கல்வி நடவடிக்கையின் தரத்தைப் பற்றியாவது ஆறுதலடையலாமா??
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைக்கு ஒரு அதிபர் இல்லை.

தேசிய பாடசாலை ஒன்றிற்கு நியமிப்பதற்கு இந்த நாட்டில் அதிபரொருவர் இல்லை.
அப்படி ஒருவரை அவசரமாய் நியமிக்க அலுவலகங்களாலும் முடியவில்லை.போராடியாவது பெற்றுக் கொள்ள எங்களாலும் முடியவில்லை.

இனிதான் தகுதி வாய்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கான விண்ணப்பம் கோரி வர்த்தமானி வெளியிடப்பட இருக்கிறது.

பல்கலைக்கழகங்கள் தாண்டி ஐ.நா சபை வரை முஸ்லிம் பெண்கள் முன்னேறிய நாட்டில் அதிபரொருவர் இல்லையா?
அல்லது அரசியல் கூத்துகளுக்குப் பொருத்தமான தலையாட்டி பொம்மையொன்று தான் இல்லையோ? கடந்த மாதத்தில் ஒரு பரீட்சையின் போது இடம்பெற்ற குளறுபடிகள் நாடறிந்த விடயம்.பக்கத்து பாடசாலை st peters college லிருந்து பரீட்சைத் தாள்கள் தருவிக்கப்பட்டு அரை மணி நேரம் தாமதித்து பரீட்சை நடத்தப்பட்டிருக்கிறது.நல்ல நிர்வாகத்தின் அடையாளம் இது.பரீட்சைகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பற்றி அறிந்த ஒரு ஆசிரியர் கூட அங்கில்லையா?

சில மாதங்களின் முன் மாணவி ஒருவர் மேம்பாலத்திலிருந்து குதித்திருக்கிறார்.மாணவியின் மனநிலை,உள்நோக்கம் பற்றிய விடயங்களை விடுத்து பார்த்த போது "மாணவத் தலைவியரின் நிந்தனை" முக்கிய காரணியாக பேசப்பட்டது.தலைமைத்துவத்தின் அராஜகம் இப்படி நடக்கிறது.

இலங்கையின் எந்த பாடசாலையாக இருந்தாலும் சரி,பெற்றோர் கூட்டத்திற்கு பெற்றோர் வருவற்கென்று சில நடைமுறைகள் இருக்கின்றன.இறுக்கமான ஆடை,கவரும் வர்ண ஆடைகள் தவிர்த்து ஒழுக்கமான ஆடைகள்(பெரும்பாலான இந்து,பௌத்த பாடசாலைகளில் சாரி )உடுத்தி வருமாறு பணிக்கப்படுகின்றனர்.ஆனால் இங்கு பெற்றோர் கூட்டங்களில் fancy dress parade (specially  denims,t-shirts,cooling glasses)நடக்கிறது.Discipline committee ன் சாதனைகள் இது.
கடந்த வருடம் மாணவியொருவர் அமைச்சருக்கு கேக் ஊட்டிவிட்ட காணொளி சமூக வலைத்தளமெங்கும் பரவலாய் வலம் வந்தது.முஸ்லிம் பாடசாலையால் போதிக்கப்பட்ட  இஸ்லாமிய விழுமியம் அது.

சில வருடங்களிற்கு முன்னர் பழைய மாணவியரின் get to gether நிகழ்வுகளை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.அது தான் முஸ்லிம் பாடசாலையென பெயர் சொன்ன அற்புத நிகழ்வு.

சரி இது எதுவுமே வேண்டாம்.நிகழ்காலத்தில் நடை போட்டால்.....
சில ஆசிரியைகள் தத்தமது வசதி,இராஜாங்கம் என நிலைப்படுத்தி கடந்த 15/20 வருடங்களாக அதே பாடசாலையில் குடியிருக்கின்றனர்.இடம் மாற்ற சட்டங்கள் இவர்களுக்கு செல்லுபடியாவதில்லை.அதன் நோக்கம் யாதாக இருக்கலாம்?
தும்புத் தடி கூட புதிதாக இருக்கும் போதுதான் நன்றாக கூட்டும்.தும்புகளே உதிர்ந்து போன பின் வினைத்திறனாக எதை சாதிக்கலாம்?
இதன் பின்னணியில் இருப்பது அரசியல் நாடகங்கள்.நாடகங்களிற்கு விலை, தலைநகரில் பிறந்த முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்.

அன்று முதல் இன்று வரை இந்த பாடசாலையின் Tradename என்ன தெரியுமா? #FAVOURATION...
சில மாணவர்கள் மீதான அதீத அக்கறையும்.சிலர் மீதான அத்துமீறிய புறக்கணிப்பும்.
ஆசிரியர்களது குறைகளை விமர்சிக்கும்,பாடசாலையின்  வளர்ச்சி பற்றி பேசும் பெற்றோர்களின்,வசதி குறைந்த பெற்றோர்களின்,அவர்களது அக்கிரமங்களுக்கு மறுப்பு சொல்லும் பெற்றோர்களின்  பிள்ளைகள் அங்கே அப்பட்டமாய் புறக்கணிக்கப்படுவார்கள்.அதனாலேயே பல பெற்றோர் ஊமைகளாகவே பெற்றோர்,SDS கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.(விதிவிலக்கான ஆசிரியர்களும் இருக்கின்றனர்-எனக்கு வாய்த்தவர்கள்) இன்றும் கூட சில primery வகுப்புகளிற்கான ஆசிரியர்கள் பற்றாக் குறையாக இருக்கிறது.சில வகுப்புகளிற்கு பெற்றோர் பணம் சேர்த்து சம்பளம் வழங்கி யாரோ ஒருவரை ஆசிரியர்களாக நியமித்திருக்கிறார்கள்.ஏன் ஆசிரியர் பற்றாக்குறைகள் பற்றி வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ள தேசிய பாடசாலையோன்றால் முடியவில்லை.?

பெற்றோர் சம்பளம் கொடுப்பதென்றால் அரச பாடசாலை தானா?
இப்போதெல்லாம் சாதரண தர,உயர் தர பெறுபேறுகள் வெளிவரும் போது ஒவ்வொரு பாடசாலையும் தமது பாடசாலையில் 30  பேர்9A...25 பேர் 3A..என விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.சில பாடசாலைகள் 80,90 எனவும் கூறுகிறது.எனது பாடசாலையின் மௌனம் இதயத்தை சிதைக்கிறதே!!!

சொல்வதென்றால் இன்னுமின்னும் அக்கிரமங்கள் தலைவிரித்தாடுகின்றன அங்கே.வெளியிட்டால் அதை சொன்ன மாணவர்களதும்,பெற்றோர்களதும் எதிர்காலத்தை நினைத்து குப்பைகளை கிளறவில்லை.எல்லா வசதியும் வாய்க்கப் பெற்றிருந்தும் உயரிய நோக்கங்கள் எட்டப்படாமலேயே என் பாடசாலை கட்டடங்களாய் மட்டும் உயர்ந்து நிற்பது உயிர் வரை வலிக்கிறது.

இதோ இந்த எழுத்துக்களின் வேர்கள் அந்த மண்ணிற்குரியவை.அதனால் தான் அதை ஆயுதமாக்கி போராடத் துணிகிறேன்.எனது பாடசாலை எனக்கு மட்டும் உரியதல்ல.அது ஒரு சமூக சொத்து.முழு இலங்கை முஸ்லிம்களுக்குமான சொத்து.
உங்கள் ஒவ்வொருவரதும் #உணர்ச்சியற்ற_மௌனம் ஒரு சமூகத்தையே பாதாளத்தில் தள்ளும் படிக்கட்டுகள்.

"எனக்கென்ன? நான் அங்கு படிக்கவுமில்லை.என் பிள்ளை படிக்கப் போவதுமில்லை .."
என்ற வாசகங்கள் நிச்சயமாய் மறுமை நாளில் காதுகளில் எதிரொலிக்கும்.
அலப்போவிலும்,மோசூலிலும் சிதையும் உறவுகளுக்காய் கரம் கோர்ப்பதில் தவறில்லை.ஆனால் இங்கே ஜாஹிலிய்ய சமூகமாய் ஒரு சமூகத்தை புதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தொழுகையில் உயிர்நீத்த ஷூஹதாக்களை ஒவ்வொரு வருடமும் நினைவு படுத்தி கவலை கொள்வதில் குறை சொல்லவில்லை.பாடசாலைக்குள் பலரை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இனவாதத்தை உமிழ்கிறான்,பொருளாதாரத்தை அழிக்கிறான் என பேரினவாதிகளை திட்டித் தீர்ப்பதில் பிழையில்லை.ஆனால் ஒரு சமூக சொத்தின் அத்திவாரத்தை சிதைத்து அதையேதான் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

சமூகத் தலைமகளே,உங்கள் சமூக தொண்டில் இந்த பாடசாலை உள்ளடங்காதா?
தஃவா இயக்கங்களே, உங்கள் தஃவா களம் இந்த பாடசாலை இல்லையா?
உலமாக்களே, இஸ்லாத்தை போதிக்க,பிரயோகப்படுத்த இந்த பாடசாலைக்கு தகுதியில்லையா?
கல்விக்கான தொண்டர்களே,நீங்கள் தொண்டு செய்யுமிடம் இந்த பாடசாலை இல்லையா?
பாடசாலையின் தேவை உணர்ந்து,மறைந்த ராஸிக் பரீடின் தியாகத்தை உணர்ந்து அத்தனை பேரும் கரம் கோர்த்தால் மாற்றங்கள் சாத்தியமாகலாம். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் கண்ணீரை கலந்து உயிர்ப்பாய் மன்றாடுகிறேன்.
#எனது_பாடசாலையை_மீட்டுத்_தாருங்கள்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post