வரிச் சட்டங்களை தோல்வியுறச்செய்வதே குறிக்கோள்: ஜே.வி.பி

மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் வரிச் சட்டத்தை சகல மக்களும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் என ஜே.வி.பி கோரியுள்ளது.

இது தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜே.வி.பியினர் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை கொழும்பில் ஆரம்பித்தனர். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வற் வரியை 15 வீதமாக அதிகரித்த அரசாங்கம், இத்துடன் நின்றுவிடாது மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் உத்தேச வரிச் சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

புறக்கோட்டை ரயில் நிலையத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்திட்டத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தொழிற்சங்க தலைவர் கே.டி.லால்காந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரப்படும் வரி சட்ட மூலங்களை எதிர்க்காது சமிக்ஞை விளக்குகள் போன்று செயற்படுகின்றனர். தமக்கு வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் போது சபையில் கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டத்துக்கும் ஆதரவு வழங்குகின்றனர். வரப்பிரசாதங்களுக்காக அவர்கள் கைகளைத் தூக்குவதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லை. மிக மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் பிரதிநிதிகளே அங்கு இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் வரப்பிரசாதங்களுக்காக பெயரளவில் உள்ள பொம்மைகளாக இருக்கின்றனர். இவர்களின் ஊடாக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே சுமையை மேலும் அதிகரிக்கும் உத்தேச வரிச்சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றார்.

உத்தேச வரிச்சட்ட மூலத்தின் ஊடாக வருடாந்தம் ஐந்து இலட்சம் அல்லது அதற்கு மேலதிகமான வருமானத்தை ஈட்டும் சகலரிடமும் வரி அறிவிடப்படவுள்ளது. இதுவரை காலமும் பதிவுசெய்யப்பட்ட துறைசார் நிபுணர்களிடம் மாத்திரமே வரி அறிவிடப்பட்டது. ஆகக் கூடியது 24 வீத வரி அறவிடப்படவுள்ளது. தொழில் புரிபவர்களுக்கு வருடாந்தம் 6 இலட்சம் ரூபாவரையான வருமானத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் வீட்டு கடன்பெற்றிருந்தால் 12 இலட்சம் ரூபா வரை வரி விலக்கு இதுவரை வழங்கப்பட்டது. எனினும் உத்தேச சட்டமூலத்தில் இந்த விடயம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

எனவே சகலரும் வரி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் சுமை மேலும் அதிகரிக்க விருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.