ஆப்கானிஸ்தான்: நேட்டோ படைகள் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்


FILE IMAGE

ஆப்கானிஸ்தானில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் துப்பாக்கி வைத்திருப்பவன் எல்லாம் தீவிரவாதியாக மாறியுள்ளதால் அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வன்முறையும், தீவிரவாதமும் தலைவிரித்து ஆடி வருகிறது. அங்குள்ள தீவிரவாதிகளை ஒடுக்க உள்நாட்டு ராணுவத்துடன் ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டுப் படைகளும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் எல்லையோரம் உள்ள கந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட தமான் பகுதியில் இன்று பிற்பகல் நேட்டோ படையினர் சென்ற வாகன வரிசைமீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடலில் குண்டுகளை கட்டிவந்த ஒரு தீவிரவாதி வாகன வரிசைக்கு குறுக்கே பாய்ந்தான்.

இந்த தாக்குதலில் மூன்று நேட்டோ வீரர்கள் பலியானதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்பாக நேட்டோ படைகளின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு ஏதும் வெளியாகவில்லை.