பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Share This
(அகமட் எஸ். முகைடீன்)

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று (15) செவ்வாய்க்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ. பசீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் சமூக நல அமைப்புகளுக்கு அலுவலக பாவனைக்கான தளபாடங்களும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவையினை திறன்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு அலுவலக கைப்பைகள் வழங்கப்பட்டன.     

இதன்போது கல்வி, சுகாதார, விவசாய மற்றும் மாநகர சபை போன்ற திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் விளக்கமளித்தனர். அத்தோடு இப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தும்வகையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர்களின் கவனத்தை அதிகரிக்கும்வகையில் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அந்தவகையில் கற்றல் செயற்பாட்டில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களை இனம்கண்டு அவர்கள் தொடர்பில் அம்மாணவர்களின் பெற்றோர்களுடன் விஷேட கலந்துரையாடல்களை அதிபர்கள் மேற்கொண்டு அம்மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு பங்காற்ற வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

மேலும் கல்வி மற்றும் புறக்கீர்த்திய செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கின்ற மாணவர்களை பாராட்டும்வகையில் ஆண்டுதோறும் வருடாந்த பரிசளிப்பு விழாக்களை பாடசாலை மட்டத்தில் நடத்துவதன் ஊடாக ஏனைய மாணவர்களையும் சாதனையாளர்களாக மாறுவதற்கு வழியமைப்பதோடு, இந்நிகழ்வுக்கு பார்வையாளர்களாக பெற்றோர்கள் அழைக்கப்படுகின்றபோது சகல பெற்றோர்களும் தமது பிள்ளைகளும் சாதிக்க வேண்டும் என்ற மன உணர்வை ஏற்படுத்தும் என பிரதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை கொட்டுவதனால் சுகாதார சீர்கேடு நிலவுவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சாய்ந்தமருது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் வட்டாரங்கள் தோறும் வட்டார சுற்றாடல் விழிப்புக் குழுக்களை உருவாக்குவதற்கான தீர்மானம் இதன்போது மேற்கொள்ளப்பட்டது. 

அத்தோடு பரீட்சார்த்த நடவடிக்கையாக சாய்ந்தமருதில் அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்களில் உழவு இயந்திர பெட்டிகளை தரிக்கச் செய்து குப்பைகளை சேகரித்து அகற்றும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவசாய திணைக்களத்தினால் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும்வகையில் பயிர்ச் செய்கைக்கான விதைகள் வழங்கப்படுகின்றபோதிலும் அவற்றை உரியமுறையில் மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வழங்கப்படாமையினால் வறிய மக்கள் அப்பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாய பரிசோதகரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து விவசாய உற்பத்தி உபகரணங்களை வழங்கும்வதற்கான பயனாளிகளை தெரிவு செய்து தருமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டார்.Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE