அஸ்வர் ஓர் பொதுநலன் விரும்பி - இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி


தன்னுடன் 40 வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் மறைவு பெரும் கவலையளிப்பதாகவும்தான் மக்காவில் இருந்து அவருக்கு விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் நிலை அறிந்து சமூகத்தின் குரலாக ஏ.எச்.எம்.அஸ்வர் செயற்பட்டு வந்ததாகவும்அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பௌஸி மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் அமைச்சர் அஸ்வர் சுயநலமின்றி செயற்பட்ட ஓர் அரசியல்வாதியாவார். அவருக்கு குடும்ப விடயங்கள் குறித்து கவனம் செலுத்தகூட நேரம் இருக்கவில்லை. அவர் இறுதிவரை சமூகத்தின் குரலாக ஒலித்தார். பாராளுமன்றத்திலும் சிறந்த பேச்சாளராக தொழிற்பட்ட அவர், மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். அவர் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக இருந்து சிறப்பாக செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.