Aug 16, 2017

தவத்தால் வாழ்வு மாறுகிறது; சம்சுல் உலூம் வித்தியாலய தரமுயர்த்தலுக்கு மக்கள் பாராட்டு


(சாகிர் அஹமத்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்களின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சம்சுல் உலூம் வித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டுள்ளதற்கு அப்பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேற்படி சம்சுல் உலூம் வித்தியாலயம் அக்கரைப்பற்றின் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. அப்பிரதேசத்தில் அதிகமாக வசிப்பவர்கள், 1985 ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரத்தால் ஆலையடிவேம்பு தமிழ்ப் பிரதேசத்தில் அமைந்திருந்த ஜலால்தீன்புரம் மற்றும் சின்னமுகத்துவாரம் போன்ற முஸ்லிம் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நிரந்தரமாகக்கு டியேறியவர்களும் வசதி குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். 

அதுமாத்திரமல்லாமல் மேற்படி பிரதேசம் மீராவோடை என்கின்ற குளத்தைத் தாண்டியும் உள்ளது. அதனால் மழைக்காலங்களில் இக்குளம் நீர்ப்பெருக்கிற்கு உட்படும் போது மக்கள் மாற்று வழியையே பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுவது வழக்கமாகும். இவ்வாறு நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் உயிர்கள் காவுகொள்ளப்படும் சூழ்நிலையும் உண்டு. 

இக்காரணங்களினால் இக்குளத்தைத் தாண்டி நகர்ப்புறப் பகுதிகளிலுள்ள பாடசாலைக்குச் செல்லும் தமது பிள்ளைகளை பெற்றோர் நீர்ப்பெருக்குக் காலங்களில் பாடசாலைக்கு அனுப்புவதற்கு விரும்புவதில்லை.

இவ்விடயங்களைக் கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள், இம்மக்களின் மேற்குறித்த போக்குவரத்துச் சிரமங்களை இல்லாமல் செய்யும் பொருட்டு, இப்பிரதேசத்திற்கான ஒரேயொரு போக்குவapரத்துப் பாதையான அக்கரைப்பற்றுக் கடற்கரை வீதியை நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கூட பயன்படுத்துமளவு கடந்த வருடம் மாகாண சபை நிதியில் நிர்மாணித்துக் கொடுத்தார்.

அவ்வாறே, இடப்பெயர்வு, வறுமை மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் போன்ற காரணங்களால் இப்பிரதேசத்தில் அதிகமான மாணவர்கள் 05 ஆம் வகுப்பிற்கு மேலே கல்வி கற்பதில் ஆர்வம் காட்டாத நிலையையும், இதையும் மீறி நகர்ப்புற பாடசாலைகளுக்கு கற்கச் செல்லும் மாணவர்கள் வளர்ச்சியுற்ற பிரதேச மாணவர்களோடு போட்டியிட்டுக் கற்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் நிலையையும் கருத்திற்கொண்டு,  இப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதுவரை 05 ஆம் வகுப்பு வரை மட்டும் கற்கக் கூடிய சம்சுல் உலூம் வித்தியாலயத்தை 09 வகுப்பு வரையும் கற்கக்கூடிய வகை - 02 (TYPE -02) பாடசாலையாக இவ்வருடம் தவம் அவர்கள் தரமுயர்த்திக் கொடுத்துள்ளார். 
இவ்வாறு தவம் அவர்கள் இப்பிரதேசத்திற்குச் செய்துள்ள மிகப்பெரிய கைங்காரியத்தை தாம் ஒரு போதும் மறக்க மாட்டோம் எனவும், அவருக்கு எவ்வாறு நன்றி சொன்னாலும் அது போதாது எனவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். தலைவர்களிடம் மக்கள் அலைந்து கேட்கின்ற விடயங்களையே செய்து கொடுக்காத தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில், மக்களின் தேவையை தாமாக உணர்ந்து செய்து தருகின்ற இவரைப் போல தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு தவம் சிறந்த உதாரணம் என மக்கள் கூறுகின்றனர். 

இது தொடர்பாக தவம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது “ கல்வியினாலேயே இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன். அதனால் கல்விக்குப் பணியாற்றுவதில் என்றும் பின்னிற்க மாட்டேன். அல்லாஹ் எனக்கு உதவியதால் நான் அந்த மக்களுக்கு உதவியுள்ளேன். 2018 ஆம் ஆண்டிலிருந்து இப்பிரதேச மக்களின் வாழ்வு மாறப்போகிறது. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறுகிறேன். அடுத்த வருடத்திற்கான மாணவர்களைச் சேர்ப்பதில் மக்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதுதான் மீதியுள்ள பணி’’ என வழக்கமான தனது பாணியில் சுருக்கமாகக் கூறினார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post