நவகமுவ பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (09) நவகமுவ பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹானை விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனமை தொடர்பில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளைக் குறித்த நபர் கைது செய்யப்பட வேளை 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியார தனமல்வில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் தொடர்பில் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது புறக்கோட்டை, ஜா-எல, கேகாலை, தவுலகலை போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராக முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் இன்று (10) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.