வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பக் கூடிய மேலதிக கேள்விகளை மட்டுப்படுத்துவது அநீதியானது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
உறுப்பினர்கள் கேள்விகேட்பதற்குள்ள உரிமையை மட்டுப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தனர். வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு அதிகநேரம் எடுத்துக் கொள்வதால் உறுப்பினர் ஒருவர் மேலதிக கேள்வியாக மூன்று கேள்விகளைக் கேட்பதற்குப் பதிலாக இரண்டு கேள்விகளாக மட்டுப்படுத்த அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்திருந்ததுடன், பரீட்சார்த்த கேள்விகளை இரண்டாக மட்டுப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். நேற்றைய தினம் எதிரணி எம்பிக்கள் மூன்றாவது மேலதிக கேள்வியை எழுப்ப முற்பட்டபோது சபாநாயகர், இரண்டு கேள்விகளுடன் மட்டுப்படுத்துமாறு கோரினார். இதனைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிரணி எம்பிக்கள், கேள்விகளை மட்டுப்படுத்துவது தமக்கு இழைக்கப்படும் அநீதி எனச் சுட்டிக்காட்டினர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த விமல் வீரவன்ச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் சபாநாயகரின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்தனர்.
“அமைச்சர்களிம் கேள்விகளை எழுப்ப எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் இது மட்டுமே. ஆளுந்தரப்பு எம்.பி.க்களை பொறுத்தவரையில், அவர்களது குழு கூட்டங்களின் போது அமைச்சர்களிடம் தேவையான கேள்விகளை கேட்டுக்கொள்ளமுடியும். அந்த வகையில், ஆளுந்தரப்பு எம்.பி.க்கள் எழுப்பக்கூடிய கேள்விகளின் எண்ணிக்கையை இரண்டாக குறைப்பது, அவர்களைப் பொறுத்தவரையில் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால், எதிரணி உறுப்பினர்களுக்கு அப்படிக்கிடையாதென டலஸ் அழகப்பெரும இதன்போது சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். எனினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் தினேஷ் குணவர்தன எம்.பி.யும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.
அந்தகட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது மேலும் இரு மாற்று வழிகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தினேஷ் குணவர்தன கூறினார்.
“பாராளுமன்றத்தை காலையில் கூட்டினால் இந்தநேரப் பிரச்சினைவராது என்பதால், சபை நடவடிக்கைகளை காலையில் ஆரம்பிக்குமாறு நான் யோசனை முன்வைத்திருந்தேன்”என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, விசேடமாக கூட்டப்படும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட விசேட விடயத்தை பற்றி பேசிமுடிவெடுக்குமாறும், பொதுவான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது மட்டும் ஏனைய பொதுவான விடயங்கள் பற்றி பேசுமாறும் கேட்டுக் கொண்டார்.
எனினும், கேள்விகளை மட்டுப்படுத்துவது தனது தனிப்பட்ட தீர்மானம் இல்லையென்றும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பரீட்சார்த்தமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும் கூறினார். கேள்விகளைக் குறைக்குமாறு தான் பரிந்துரைத்தபோது, மேலதிக கேள்விகளைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். பரீட்ச்சார்த்தமாக இதனை பார்த்துவிட்டு மாற்று வழிகள் குறித்து தீர்மானிக்க முடியும் என்றும் சபாநாயகர் மேலும் கூறினார்.

Share The News

TODAYCEYLON

Post A Comment: