Aug 20, 2017

கல்குடாவில் நாகரீகமான அரசியல் கலாசாரம்: அமைப்பாளர் றியாழின் செயற்பாடு பாராட்டத்தக்கது

எம்.என்.எம்.யஸீர் அறபாத்   
பொதுவாக அரசியலில் ஒருவரையொருவர் தூற்றுவதிலும் எதிர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி தனது அரசியலிருப்பைத்தக்க வைப்பதிலும், மற்றவர்களின் அரசியல் செயற்பாடு நியாயமானதாக இருந்தாலும், அதனை மக்களுக்கு அநியாயமானதென நிறுவுவதிலும் தனது காலத்தையும் நேரத்தையும் பலர் செலவழிப்பதை நாம் கண்டுள்ளோம்.


இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து மாறுபட்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸினால் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கறிஞர் HMM.றியாழ் அவர்களின் செயற்பாடு கடந்த கால கல்குடா அரசியலில் நாம் கண்ட மனிதர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்படுகிறது.

தேர்தல் காலங்களில் வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துச் செயற்பட்டார். இதனால் வழமைக்கு மாறாக கல்குடாவில் தேர்தல் வன்முறைகள் குறைவாகவே காணப்பட்டது.
தேர்தல் மேடைகளில் அவரின் பேச்சு எதிர்காலத்தில் தான் முன்னெடுக்கவிருக்கும் உரிமை மற்றும் அபிவிருத்தி விடயங்களை கொண்டமைந்ததாக இருந்தது. அது மாத்திரமின்றி, தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை நோக்கி அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், கள்ள வாக்குகளைப் போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசியல்வாதிகளின் முதன்மையான செயற்பாடாக இருக்கும் வேளையில், இவரோ மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அரசியல் செய்யவோ கள்ள வாக்குகள் தனக்குப் போடுவதையோ அனுமதிக்கவில்லை.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதியளிப்பதும் வெற்றி பெற்றவுடன் அதை மறப்பதும் தோல்வி கண்டால், மக்களை விட்டும் தூரமாகிச்செல்லும் அரசியல்வாதிகளைக் கண்டு பழகிய கல்குடா மக்கள் மத்தியில் றியாழ் வித்தியாசமான மனிதராகவே திகழ்கிறார். தான் தேர்தலில் தோற்றாலும், தன்னை நம்பி வாக்களித்த சுமார் பத்தாயிரம் வாக்காளர்களின் நம்பிக்கையை வீணாக்காது, அவர்களுத்தேவையான அபிவிருத்திகளைக் கொண்டு வருவதில் காத்திரமாகச் செயற்பட்டார் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. எதிரணியினரும் பாராட்டுமளவிற்கு தனது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினார்.

நீண்ட காலமாக அபிவிருத்தித் தாகத்திலிருந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களின் தாகத்தைத் தீர்ப்பதில் வெற்றியும் கண்டார். முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் கல்குடாத்தொகுதிக்கு இவ்வாறு நிதியொதுக்கியது கிடையாது. இவரின் முயற்சியால் இவரின் காலத்திலேயே இவ்வாறான பாரிய நிதியொதுக்கீடு கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களால் ஒதுக்கப்பட்டு அண்மையில் அங்குரார்ப்பண நிகழ்வும் இவரின் தலைமையில் நடைபெற்றது.
புத்துயிர் பெறும் கல்குடா எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட கல்குடாவின் அபிவிருத்திப் பெருவிழாவிற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் அழைத்தமையும் குறிப்பாக, தனது அரசியலில் எதிர்த்தரப்பான கௌரவ பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களையும் அழைத்தமை எல்லோராலும் வியந்து பேசப்பட்டதோடு, இவரின் அரசியல் நாகரீகம் பாராட்டப்பட்டது.

அது மாத்திரமின்றி, மேடை கிடைத்தால் போதும் எதிரணியினரை விலாசித்தள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில் தனக்கு கிடைத்த மேடையைக் கண்ணியமான முறையில் கல்குடா அபிவிருத்திக் கொண்டு வரப்பட்ட பின்னணி அதற்கான தன்னால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி என்பவற்றோடு, எதிர்காலத்தில் கல்குடாவில் தன்னால் முன்னெடுக்கப்படவிருக்கும் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள், அபிவிருத்தி போன்ற விடயங்களைத் தெளிவுபடுத்திப்பேசி தனதுரையை நிறைவு செய்தமையும் இவர் கல்குடாவில் நாகரீகமான அரசியல்வாதியாக எல்லோராலும் நோக்கப்படுகிறார்.

மென்மேலும் தடைகளைத் தாண்டிப் பயணிக்கவும் எதிர்காலச்சந்ததிகளுக்கு நாகரீகமான அரசியலை அறிமுகப்படுத்தவும் வல்லோன் அல்லாஹ் அருள்புரிய பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post