துன்னாலையில் மீண்டும் சுற்றிவளைப்பு : பதற்றத்தில் மக்கள்


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துன்னாலைப்பகுதியில் இன்று மாலை மீண்டும் பொலிஸாரும் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் இன்று காலை சுற்றிவளைப்பு இடம்பெற்றதையடுத்து மாலையும் சுற்றிவளைப்பு இடம்பெறுவதால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலையில் இடும்பெற்ற சுற்றிவளைப்பின்போது ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் அதிரடிப்படையினரைவிட அதிகமாக பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு இடம்பெற்று வருகின்றது. அதேவேளை, வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் இறக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டு சம்பவம், பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்ட விரோதமாக மணல் கடத்தியமை, வால் வெட்டுச் சம்பவம், கடற்படையினரோடு மோதலில் ஈடுப்பட்டமை போன்ற செயற்பாடுகளில்  ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கிலேயே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை இன்று காலை மேற்கொண்டனர்.
காலையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களோடு தொடர்புடைய 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுதிருந்ததுடன் 4 மோட்டார் சைக்கிள்களும் 2 கென்டர் ரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.