Home » » ‘எதிராக வழக்கு தாக்கல் செய்வோம்’

‘எதிராக வழக்கு தாக்கல் செய்வோம்’


மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்தல் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு ஒப்படைக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கம் (பெப்ரல்) தெரிவித்துள்ளது.  
முன்மொழியப்பட்டுள்ள, 20 ஆவது அரசமைப்பின் திருத்த யோசனைக்கு அமைவாக, சகல மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஒரேநாளில் நடத்துவது என்ற போர்வையில், மாகாண சபைத் தேர்தல்களையும் ஒத்திவைப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.  
“கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் இவ்வருட இறுதியில் நடத்தப்பவேண்டும். எனினும், அரசாங்கம் மிகவும் சூட்சுமமான முறையில், அந்தத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது” என்று, அவ்வமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.  
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடையவிருக்கின்ற, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான வாக்கெடுப்பு, 2019ஆம் ஆண்டு வரையிலும் ஒத்திவைப்பதற்கான கட்டளைகள், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.  
அந்த திருத்தத்தில், சகல மாகாண சபைகளையும் கலைத்துவிட்டு, ஒரே நாளில் தேர்தல்களை நடத்தவும், அதனை தீர்மானிப்பதற்கான அதிகாரத்திலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவை நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இந்தத் திருத்தத்தின் பிரகாரம் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரையிலும் அல்லது சகல மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் நிறைவடையும் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.  
‘அரசமைப்பின் நியமிகளின்படி குறித்துரைக்கப்பட்ட திகதியிலிருந்து ஒருவார காலத்துக்குள், எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தலொன்றை’ என்று திருத்தப்படவுள்ளது. 
அப்படியாயின், ஊவா மாகாண சபைக்கான பதிவிக்காலமே, இறுதியாக நிறைவடையவுள்ளது. அதாவது,  
அம்மாகாண சபைக்கான பதவிக்காலம், 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியே நிறைவடையவுள்ளது.  
முன்மொழியப்பட்டுள்ள, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. அந்த திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அவை, இவ்விரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  
இதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குள் உள்ளடக்கப்படவேண்டிய கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
எனினும், அந்த வர்த்தமானி அறிவித்தல், ஜூலை மாதம் 28ஆம் திகதியன்றே வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கத்தின் (பெப்ரல்) நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.