ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்- UNP
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோற்கடிக்கும் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறையான சோதனை நடத்தப்படும். இடம்பெற்ற சம்பவத்துக்காக அமைச்சர் விரைவில் விளக்கமளிக்கவுள்ளார்.
அதனடிப்படையில் ஆதாரங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் கட்சி என்ற ரீதியில் நாம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதைப் பற்றி உத்தியோகப்பற்றற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.