20 - 20 வெற்றி பெறப்போவது யார்?


நஜீப் பின் கபூர்

வருகின்ற 20 ம் திகதி அரசியல் யாப்பு 20வது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு. நமது வார ஏடு அச்சேற இருக்கின்ற கடைசி நேரத்தில் தீர்க்கமான 20-20 பற்றி சிறியதோர் குறிப்பை எழுதிப்போடலாம் என்று தோன்றியது.

நமது ஜனாதிபதி மைத்திரி தனது மகள் சத்துரிக்கா எழுதிய ஜனாதிபதி தந்தை என்ற நூலை வெள்ளோட்டம் விட்ட கையோடு ஐ.நா கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக விமானமேறுகிறார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தீர்க்கமான ஒரு பலப்பரீட்சை வருகின்ற 20ம் திகதி அரசியல் யாப்பின் 20 திருத்தம் என்று பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது.

நாட்டில் தலைவர் இல்லாத நிலையில் தயாராகின்ற இந்தப் போட்டியை நல்லாட்சிக்காரர்கள் எப்படி முகம் கொடுப்பார்கள் என்று முழு நாடுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இந்தப் போட்டியில் ஆளும் தரப்பு சாதாரண வெற்றியை சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மைத்திரி-ரணிலுக்கு மூன்றில் இரண்டு என்ற ரீதியில் இந்த வெற்றி தேவைப்படுகின்றது.

மாகாண சபைகளில் இது பற்றிய வாக்கெடுப்பு நடைபெற்றபோது நல்லாட்சிக்காரர்கள் இதில் வெற்றி வாய்ப்பில் இருந்தபோதும் இது விடயத்தில் ஒரு குழப்பநிலையே அங்கு காணப்பட்டது. எனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது பெரும்பாலான மாகாணசபைகளில்; நல்லாட்சிக்காரர்கள் கரைசேர்ந்து விட்டனர்.

சில மாகாணங்கள் அவர்களுக்கு பின்னடைவு நிலை. இந்த நிலையில் இது பற்றி நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து வருகின்ற நாட்களில் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறியக்கொடுக்க இருக்கின்றார். நமக்கு வருகின்ற தகவல்படி நீதி மன்றம் இது விடயத்தில் பச்சைக் கொடியை காட்ட இருக்கின்றது என்று தெரிகின்றது.

எப்படியும் இந்த 20வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் அரசு மூன்றில் இரண்டு என்ற ரீதியில் ஆட்டத்தில் வெற்றிவாகை சூட வேண்டும். நல்லாட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் காட்சி உறுப்பினர்கள் அடம்பன் கொடி திரண்டால்போல் இருக்கின்றார்கள்.

ஆனால் பிடியிலிருந்து வெளியே நிற்கின்ற முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச எப்படி நடந்து கொள்வார் என்று தெரியவில்லை. ஒரு வேளை அவர் தன்னைத் தண்டித்த நல்லாட்சிக்காரர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம் என்று 20 வதற்கு சிவப்புக் கொடியைக் கையில் எடுக்க ஆர்வமாக இருந்தாலும் களநிலவரம் தெளிவில்லாமல் இருப்பதால் அவர் வாக்கொடுப்பில் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் அணியில் இருக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.

சுதந்திரக் கட்சிக்காரர்கள் இந்த 20 விவகாரத்தில் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கின்றார்கள். இவர்கள் மைத்திரி - மஹிந்த அணி என்று இரு முகாம்களாக இந்தப் போட்டியில் நின்று ஆட இருக்கின்றார்கள்.

மைத்திரி அணியிலுள்ள பலர் கிரிக்கட் போட்டிகளில் முன்கூட்டி வாங்கிக் கொண்ட பணத்துக்கு கோட்டைவிடுபவர்கள் நிலையில் இந்த ஆட்டத்தில் களமிறங்குவார்கள் என்ற அச்சம் ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கின்றது.

இதற்கு புத்தளத்து அருந்திக்க நல்ல உதாரணம் அத்துடன் அமைச்சர் சுசில், யாப்பா, செனவி போன்றவர்கள் கூட இருந்து குழிபறித்து விடுவார்களோ என்ற பயம் நல்லாட்சிக்காரர்களுக்கு குறிப்பாக மைத்திரிக்கு கலக்கத்தைக் கொடுத்திருக்கின்றது.

ஆனால் எமது பார்வையின்படி ஆட்டக்காரர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற அச்சமும் எதிர்பார்ப்பு நாட்டில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டாலும்  களநிலவரம் நல்லாட்சி கடுமையாகப் போராடி இந்த 20-20 விவகாரத்தில் கரைசேரக் கூடும் என்று எமது கணிப்பீடுகளில் தெரிய வருகின்றது. மைத்திரி அணியில் இருந்து குழப்பம் பண்ணுபவர்கள் பெரிதாக சாதிப்பார்கள் என்று நாம் கருதவில்லை.

இதனை கணக்குப் போட்டு நமது வாசகர்களுக்கு விளக்கலாம் என்று தோன்றுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் 225
மூன்றில் இரண்டு அரச இலக்கு 150
எதிரணி வெற்றிக்கு இலக்கு 075

அப்படியானால் நமது பாராளுமன்றத்தில் கள நிலவரம்.

ஐ.தே.க 107
சு.க. மைத்திரி அணி 039
மஹிந்த அணி கூட்டு 051
த.தே.கூ 016
ஜேவிபி 006
டக்லஸ் 001
தொண்டா 002
இதர (குழறுபடிகள்) 003

இப்படிப் பார்க்கும்போது நல்லாட்சிக்கு 145
கூட்டு எதிரணிக்கு 051

மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசு வெற்றிபெற 20ல் வெற்றி பெற இன்னும் 5 வாக்குகளே தேவை.

மஹிந்த அணி அல்லது கூட்டு எதிரணிக்கு 24 வாக்கு இன்னும் தேவை. நாம் முன் குறிப்பிட்டபடி நல்லாட்சிக்குள் என்னதான் காட்டிக் கொடுப்புக்கள் எட்டப்பர் வேலைகள் நடந்தாலும் அவர்கள் கரைசேர இடமிருக்கின்றது.

மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் என்னதான் ஓடித்திரிந்தாலும் அவர்கள் 75 வாக்குகளைப் பெறுவது என்பது ஒரு ஓவருக்கு ஆறு சிக்சர்கள் என்ற இலக்கு போன்றுதான் இருக்கின்றது.

தமிழர் கூட்டணி, மு.கா, ரிஷட், தொண்டா, டக்லஸ் போன்றவர்கள் வாக்கெடுப்பைத் தவிர்த்துக் கொண்டாலும் நல்லாட்சிக்காரர்கள் கரைசேர்ந்து விடுவார்கள். ஜேவிபியினர் இந்த வாக்கெடுப்பிலும் அதிரடியாக நடந்து கொள்ள இடமிருக்கின்றது. என்றாலும் ராஜபக்ஷாக்களின் கையோங்குவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னதான் நாடு ஆவலுடன் இந்த 20-20முடிவுகளை எதிர்பார்த்தாலும் அதிரடியாக எதுவுமே நடக்க வாய்ப்பில்லை  என்பது எமது வாதம்.

மஹிந்த தரப்பு அபூர்வமாக இதில் வெற்றி பெற்று விட்டால் அரசைக் கைப்பற்றியது போல் கூத்துப்போடுவார்கள். சிலர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது கூட நல்லாட்சிக்கு சாதகமான முடிவுகளையே கொண்டுவர உதவும் என்பதுதான் ஆடுகள நிலை.

அரசாங்கம் மூன்றில் இரண்டு nரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் கிழக்கு, சப்ரகமுவ, மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு இந்த வருடம் தேர்தல் நடைபெற மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்.