27 கைதிகள் சுட்டுப் படுகொலை,சம்பவம் தொடர்பாக கோத்தாபயவிடம் விசாரணைவெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில், 2012ஆம் ஆண்டு நொவம்பர் 11ஆம் நாள் நடந்த வன்முறைகளின் போது, 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவத்துடன், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய நேரடியாகத் தொடர்புபட்டிருந்தார் என்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், வெலிக்கடைச் சிறைச்சாலை கொலைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட இராணுவ, காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நாளை, கோத்தாபய ராஜபக்சவையும், ஏனைய அதிகாரிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது என்று காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கொலைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே பல இராணுவ, காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.