முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை அரசு பாதுகாக்கும் – சஜித் பிரேமதாஸ


சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் குற்றமற்ற நிலையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்கள் தொடர்பில் எவராவது குற்றம் சுமத்தினால் நிபந்தனைகள் இன்றி இராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்நிற்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பான் கீ மூனுடன் கையொப்பமிட்ட உடன்படிக்கை காரணமாக ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இந்தக் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.