Sep 17, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்காது - ஹரீஸ் பகிரங்க அறிவிப்புஅரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் போது சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமான எந்தவொரு செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்காது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 17 ஆவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று கல்முனை அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார், தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் அரசியல் முகவரியற்று அனாதைகளாக இருந்த முஸ்லிம் சமூகத்திற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் போன்ற பாரிய அபிவிருத்திகளை செய்து சாதனைகள் பலவற்றை மர்ஹூம் அஷ்ரப் நிகழ்த்திச் சென்றுள்ளார்.
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நிறுவியபோது பலரும் பல்வேறு கோணங்களில் நோக்கினர். சிங்கள பெரும்பான்மை தலைமைகள், அஷ்ரபை தீவிர போக்குடையவராக பார்த்தனர்.
இதனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அன்றைய அரசு, முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் தயக்கம் காட்டி, பல வருடங்கள் இழுத்தடிப்பு செய்தது.

பெரும் தலைவர் அஷ்ரப்பினால் அன்று கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் நடத்த முடியாத சூழல் நிலவியது. தமிழ் விடுதலை இயக்கங்கள் கூட முஸ்லிம் காங்கிரஸ் தங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் என்பதை கணிக்கத் தவறினார்கள்.
இதனால் அவர்களும் தவறான அபிப்பிராயத்துடன் அஷ்ரப் அவர்களை நோக்கினார்கள்.

இவ்வாறான சூழலில் மறைந்த தலைவர் அவர்கள் எமது பார்வை என்ற கொள்கைப் பிரகடனத்தினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் என்ன செய்யப்போகின்றது என்பதை விளக்கினார்.
அந்த பிரகடனம் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு சம்மந்தமானதாக இருந்தது. வடக்கு,கிழக்கு தமிழ் மக்களுடைய போராட்டத்தை இழிவுப்படுத்தாமல், அவர்களது நியாயங்களையும் வலியுறுத்திய அதேவேளை முஸ்லிம் மக்களுடைய அபிலாஷைகளை வென்றெடுக்கின்ற போராட்டமாகவே அவரது பயணம் அமைந்திருந்தது.

இன்றைய சூழலில், சிறுபான்மை மக்களுக்கு மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வழிகாட்டல் மிக முக்கியமானது என இப்போது உணரப்படுகிறது.
வடக்கு,கிழக்கு இனப்பிரச்சினை தீர்வின் போது அஷ்ரப் அவர்களின் பிரசன்னம் அவரது இராஜதந்திரமும் அவசியம் இருந்திருக்க வேண்டும் என தமிழ்த் தலைவர்களாலும் உணரப்படுகின்றன.

ஆயுதப் போராட்டத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி, ஜனநாயக வழிக்கு கொண்டு வந்த பெருமை அஷ்ரப் அவர்களையே சாரும்.
இவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய மர்ஹும் அஷ்ரப் அவர்கள் எங்களுக்கு விட்டுச்சென்ற அடையாளங்களை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்வதற்காக எமது கல்முனை மண்ணில் அஷ்ரப் ஞாபகார்த்த மையம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network