Sep 15, 2017

ரொஹிங்கிய மக்கள் மீதான வன்முறையை நிறுத்த மியன்மாருக்கு ஐ.நா கடும் அழுத்தம்


ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரும்படி மியன்மார் அரசை ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கோரியுள்ளார்.
சுவீடன் மற்றும் பிரிட்டனின் கோரிக்கையை அடுத்து கடந்த புதன்கிழமை மூடிய அறையில் கூடிய 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபை, மியன்மார் நிலை குறித்து பொது கண்டனம் ஒன்றை வெளியிட இணங்கியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடுவது இது இரண்டாவது முறையாகும்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக உரையாற்றிய அன்டோனியோ குட்டரஸ், ரொஹிங்கிய அகதிகள் நிலை “ஏற்கமுடியாத சிக்கலானது’ மற்றும் ‘பேரழிவு’ கொண்டது என்று குறிப்பிட்டார். பெளத்த பெரும்பான்மை நாட்டில் இந்த சிறுமான்மை குழு இன அடிப்படையில் அழிக்கப்படுவதாக அவர் விபரித்துள்ளார்.
மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினில் இருந்து அண்மைய வாரங்களுக்குள் சுமார் 370,000 ரொஹிங்கிய மக்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐ.நா கூறுகிறது.
ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் பொலிஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி மியன்மார் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது.
“இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்தி, வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து, நீதியின் ஆட்சியை நிறுவும்படியும் நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் அனைவரும் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மியன்மார் நிர்வாகத்தை நான் கோருகிறேன” என்று நியூ யோர்க்கில் நடந்த ஊடக சந்திப்பில் ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.
“மியன்மாரின் நிலை இன அழிப்புக்கான ஓர் பாடநூல் உதாரணம்” என்று கண்டித்த ஐ.நா மனித உரிமை தலைவர் செயித் ராத் அல் ஹுஸைனின் கூற்றை பிரதிபலிப்பதாகவே குட்டரஸின் கருத்து இருந்தது.
ரொஹிங்கிய கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியன்மார் இராணுவம், தாங்கள் ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மியன்மார் ரொஹிங்கியாக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா பொது செயலாளர் குட்டரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
“மியன்மாரில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ரொஹிங்கிய பிரச்சினையை இன அழிப்பு என்று வகைப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு பதிலளித்த அன்டோனியோ குட்டரஸ், “மூன்றில் ஒரு பங்கு ரொஹிங்கியாக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை விட வேறு வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியுமா?” என்று வினவினார். பாதுகாப்பு சபையின் புதன்கிழமை சந்திப்புக்கு பின்னர் பலம்மிக்க அந்த அமைப்பு மியன்மார் விடயத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மியன்மார் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் இடம்பெறுவதாக கூறும் அதிக வன்முறைகள் தொடர்பில் பாதுகாப்பு சபை கவலை வெளியிட்டதோடு, வன்முறைகளை உடன் நிறுத்தவும் அழுத்தம் கொடுத்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்தி, சட்ட ஒழுங்கை மீண்டும் அமுல்படுத்தி, பொதுமக்களை பாதுகாத்து, அகதிகள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் மியன்மார் விடயத்தில் பாதுகாப்பு சபை வெளியிடும் முதல் அறிக்கை இதுவென்று ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதுவர் மத்தியு ரைகிரொப்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரொஹிங்கிய பிரச்சினையை கையாண்டது தொடர்பாக மியன்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூச்சி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வரும் செப்டம்பர் 19 முதல் 25ஆம் திகதி வரை நியூ யோர்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் மியன்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி பங்கேற்பதாக இருந்தார்.
அண்மைய வன்முறைகள் காரணமாக 176 ரொஹிங்கிய கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறியதால் அந்த கிராமங்கள் முற்றுமுழுதாக காலியாகிவிட்டதாக மியன்மார் அரசு புதன்கிழமை அறிவித்தது.
அண்மைய மோதல்களில் 400 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக மியன்மார் இராணுவம் கூறியிருந்தது.
உலகில் மோசமான பாகுபாட்டுக்கு முகம்கொடுக்கும் சமூகமாக ரொஹிங்கியாக்களை ஐ.நா வர்ணித்துள்ளது. ரொஹிங்கிய மக்கள் 1982 தொடக்கம் மியன்மார் பிரஜா உரிமை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்கள் இறுதி நிமிடங்களில் தங்களது உடைமைகளை கூட முழுமையாக எடுக்க முடியாமல் வேதனையுடன் பங்களாதேஷுக்கு தப்பி வந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்தினர் மற்றும் பெளத்தர்களிடமிருந்து தப்பி அகதிகளாக வந்துள்ளனர்.
இந்நிலையில் ரொஹிங்கியாக்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக பங்களாதேஷ் கூறுகிறது. ஆனால் அவை போதாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post