ரோஹிங்கிய அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்; ஹக்கீமின் கோரிக்கை ஏற்புபிறவ்ஸ்

கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் இன்று (26) மேற்கொண்ட அட்டகாசம் தொடர்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

விசேட அழைப்பையேற்று இன்று பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் அவரை சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார். இதன்போது அங்கு சமூகமளித்திருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் அசாத் சாலி ஆகியோரும் இதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் பேரவையின் அனுசரணையுடன் இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு எதிராக வெளியிலிருந்து வந்த குழுவொன்று அட்டகாசம் புரிந்து வருகிறது. ஒரு சர்வதேச நிறுவனத்தில் பொறுப்பிலிருக்கும் ரோஹிங்கிய அகதிகளுக்கு, அரசு என்ற அடிப்படையில் உதவிசெய்யவேண்டிய கடைமை நமக்கு இருக்கிறது. இதற்கு எதிராக வெளியிலிருந்து செயற்படுகின்ற சக்திகளுக்கு இடமளிக்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

உடனே, எஸ்.எஸ்.பி.யை தொடர்புகொண்ட ஜனாதிபதி, அங்குள்ள கலநிலவரங்களை கேட்டறிந்துகொண்டார். வெளியிலிருந்து வந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற யாருக்கும் இடமளிக்கவேண்டாம். அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுங்கள். நீதிமன்றம் ஊடாக இதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ அதை செய்யுங்கள். தேவையான பாதுகாப்பு படையை கொண்டுவந்து பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.

அத்துடன் இப்பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கூறமுடியாது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் யுனா மெக்கவுலே நேற்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று சந்தித்து தெரிவித்திருந்தார். அகதிகள் விடயத்தில் இலங்கைக்கு சர்வதேச கடப்பாடு இருக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையிலிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை ஐரோப்பிய நாடுகளில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இச்சந்தின்போது, யுனா மெக்கவுலேயிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.