ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு மூன்று வகையான பணிகள் ஆற்றப்பட வேண்டியுள்ளது-இம்ரான் எம்.பிரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு மூன்று வகையான பணிகள் ஆற்றப்பட வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கிகொண்டிருக்கும் பிரட்சினைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மியன்மார் அராக்கான் பகுதி ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கை உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. மூன்றே நாளில் மூவாயிரம் பேரைக் கொன்றொழித்த, பத்தே நாளில் ஒன்றரை இலட்சம் பேருக்கும் அதிகமாக அகதிகளாக்கப்பட்டு இன்னும் இரண்டு இலட்சம் பேர் வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டு தவிக்கின்ற பேரவலம் இன,மத, அரசியல் பேதங்களுக்கு அப்பால் கடுமையாக கண்டிக்கப் படவேண்டும். எமது பிராந்தியத்தில் எமக்கு அண்மையில் நடக்கும் இந்த மனித அவலம் குறித்த கரிசனை எல்லா இடங்களிலும் மக்கள் மத்தியில் கோப அலைகளை எழுப்பியிருகிறது.
துருக்கி போன்ற நாடுகள் இந்த மக்களின் தொடர் துயரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க எடுக்கும் முனைப்புகள் மனதுக்கு ஆறுதலைத் தருகின்றன.அதே நேரம் இந்த விடயத்தில் அவசரமாக தலையிட்டு இந்த கோர நிகழ்வை நிறுத்தவேண்டிய சில நாடுகள் பாராமுகமாக இருப்பது ஏமாற்றத்தை தருகின்றது.
இருதினங்களுக்கு முன்பு வரையான பத்து நாட்களில் ஆறாயிரத்துக்கும் அதிக அப்பாவிகள் கொல்லப்பட்டும் எட்டாயிரத்துக்கு அதிகமானோர் காயப்பட்டும் ஒன்றரை இலட்சம் பேர் அகதிகளாக்கப் பட்டும் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களும் இருபத்து மூவாயிரம் வீடுகளும் எரிக்கப்பட்டும் 250 மஸ்ஜிதுகளும் 80 பாடசாலைகளும் நிர்மூலமாக்கப்பட்டும் திட்டமிட்ட ஓர் அரச பயங்கரவாதம் கோரத்தாண்டவமாடி ஓர் இனவழிப்பை செய்துகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட முழு உலகமும் அதை அசமந்தமாக நோக்குவது கவலையை, கோபத்தை உண்டாக்குவதற்கு அப்பால் நிறையவே சிந்திக்க வைக்கின்றது.
ரோஹிங்கிய சகோதரர்களைப் போல நாமும் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பாகம் என்ற வகையில் எமக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் நாம் யாரை உதவிக்கு எதிர்பார்க்க முடியும் என்ற விடயம் எம்மில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. அப்படியான துரதிஷ்ட நிலை ஏற்படாமல் இறைவன் எம்மைக் காப்பானாக.
எனினும் இப்படியான ஒரு நிலையில் நாம் யாரையும் நம்பியிராமல் நமக்கான பாதுகாப்பை நாமே தேடிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை மியன்மார் நிகழ்வுகள் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. பல்சமுக சூழலில் புரிந்துணர்வு மிக்க ஒற்றுமையான மனிதாபிமான பிணைப்பு பலமாக கொண்ட சகவாழ்வை நாம் சகோதர சமூகங்களுடன் கட்டிஎழுப்ப வேண்டும் என்பதே எமக்கு முன்னுள்ள பிரதான பணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எமக்கான எதிரிகளை நாம் வாழும் சூழலில் பூச்சிய நிலைக்கு கொண்டுவருவதே எமது பாதுகாப்பும் வெற்றியுமாகும். மாறாக அவசியமற்ற, தூரநோக்கற்ற செயற்பாடுகளை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அராகான் மக்களுக்காக நம் சகோதரர்கள் பல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட வேளை சக இனத்தவர்களும் அதில் பங்கெடுத்தமை ஆரோக்கியமான விடயமாகும்.
ரோஹிங்கியர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காகவே அநியாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் இந்த பிரச்சினையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்டும் போது அதை மனித அவலமாக முன்வைப்பதில் குறைவிடாமல் இருப்பது அவசியம். அதாவது அநியாயம் இழைப்பவர்களின், அநியாயத்துக்கு உள்ளாகின்றவர்களின் மத அடையாளங்களை முன்னிருத்தி மனித அவலத்துக்கு எதிரான ஆதரவை தேடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
அந்த மக்களுக்கு மூன்று வகையான பணிகள் ஆற்றப்பட வேண்டியுள்ளது. அதை அதற்குரிய தரப்பினரே ஆற்றவும் வேண்டும். அதற்கான அழுத்தங்களையும் ஊக்குவிப்புகளையும் தான் நாம் செய்ய முடியும்.
உயிர்பிழைத்து அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு அபயமளித்து அவர்களுக்கு சிறந்த தற்காலிக வாழ்விட வசதிகளை செய்ய வேண்டும். இது தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளின் பணிகள்.
அதுபோல் தொடரும் படுகொலைகளை உடனடியாக நிறுத்தவும் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் அவற்றுக்கு உடந்தையாக இருந்த அரச கரங்களுக்கும் எதிராக சர்வதேச ரீதியில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இது குறித்த அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஐ நா சபை மற்றும் அரசுகளதும் மனித உரிமைகள்சார்ந்த அமைப்புகளதும் பணியாகும்.
கடைசியாக இந்த மக்களது குடியுரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உத்தரவாதப் படுத்தப் படவேண்டும். அதன் மூலம் அவர்கள் தத்தம் இடங்களில் மீளக் குடியேறி தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இதற்கு இந்த மக்களின் அவலத்தை மனதில் கொண்ட நாடுகள் மத்தியஸ்தமாகி அரசியல் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இம்மூன்று தளங்களிலும் காத்திரமான முன்னெடுப்புகள் எந்தளவுக்கு எடுக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு அவசரமாக எம் சகோதரர்களின் அவலம் நீங்கும். நாம் இவற்றை கருத்தில் கொண்டு எம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்வதவசியம். பிரார்த்தனைகள் முதல் ஆர்ப்பாட்டங்கள் , கவன ஈர்ப்புகள், அழுத்தக் கோரிக்கைகள் என எல்லா நடவடிக்கைகளும் அவசியமானவை. நன்மையானவற்றில் சிறியதொன்றையும் அற்பமாக கருத வேண்டாம் என்பது நபிமொழி. எனவே மனித உயிர்களைக் காக்கும் உயர்ந்த நோக்கில் நாம் செய்யும் சிறிய விடயமும் முக்கியமானதே.
துஆ பிரார்த்தனை, கண்டன ஆர்ப்பாட்டம், ஊடகப் போராட்டம், கண்காட்சி, மேடை மற்றும் வீதி நாடகங்கள், சுவரொட்டி பிரசாரம், முறைப்பாடுகளை கையளித்தல், தபால் அட்டை விழிப்புணர்வு போராட்டம், அழுத்த கோரிக்கைகளை முன்வைத்தல் ... என எந்த வகையான நடவடிக்கையை யார் செய்தாலும் அதில் சிறிது – பெரிது என்ற பேதமின்றி அனைத்து முயற்சிகளும் நன்றிக்குரியவை. எமது முயற்சிகள் எம் சகோதர சமூகங்களை கவரத் தக்க வகையில் அமைவது அவசியம். நாங்களும் இத்தகைய எல்லா நடவடிக்கைகளிலும் எம்மால் முடியுமானவற்றை செய்து இந்த சமுகத்துக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்போம் என்பதை அறியத்தருகின்றோம்.
ஊடகப்பிரிவு