மேடைப்பேச்சு சமூகத்திற்கு விடிவை தராது; கடும் தொனியில் பேசிய ஹக்கீம்!வெறும் மேடைப்பேச்சுக்களும், பத்திரிகை அறிக்கைகளும் மாத்திரம் உரிமைகளுக்கு தீர்வை தந்துவிடாது என அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எம்முள் பலர் மறந்து, எதை ஒழிப்பதற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த விடயங்களில் அதிகூடிய அக்கறை காட்ட தொடங்கியுள்ளார். அதில் முக்கியமானது பிரதேச வாதம்.
ஊர்வாதம், பிரதேச வாதம் நாடு முழுவதும் எம்மவர்களாளேயே படு மோசமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது என்னையும் இலக்கு வைத்து பிரதேச வாதம் வந்துவிட்டது.
அபிவிருத்தி செய்வது மட்டும் தான் அரசியல் என்பது எங்களுடைய அரசியல் தலைவர்களின் கொள்கையாக இருக்கிறது. வெறும் மேடைப்பேச்சுக்களும், பத்திரிகை அறிக்கைகளும் மாத்திரம் உரிமைகளுக்கு தீர்வை தந்துவிடாது. அதற்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு புதிய யுக மாற்றம் நிகழ வேண்டுமானால் அழுத்தத்துடன் செயற்படுகின்ற இளைஞர் குழுவொன்று தேவை. இன நல்லிணக்கம் என்ற விடயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பிரதானமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.