கொழும்பில் மியன்மார் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அடிப்படைவாத குழு மேற்கொண்டதாக பிரச்சாரம்

மியன்மார் நிலவரம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அடிப்படை வாதக் குழுக்கள் முன்னின்று வெளியிடும் பொய்யான தகவல்கள் காரணமாக மியன்மார் பௌத்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் கவலை அடைவதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கைக்கான மியன்மார் தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று (13) இலங்கைக்கான மியன்மார் தூதுவரை சந்தித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மியன்மார் பௌத்த மக்களுடன், இலங்கை வாழ் பௌத்த மக்கள் கைகோர்த்துக் கொள்வதாகவும் அவர்கள் மியன்மார் தூதுவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அடிப்படை வாதக் குழுக்கள் சில, இலங்கைக்கான மியன்மார் தூதரகத்துக்கு முன்னாள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பிலும் தாம் வருத்தப்படுவதாகக் குறித்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியான சில புகைப்படங்கள் கடந்த ஒரு தசாப்தத்துக்கு முன்னர், ஆப்பிரிக்காவின், ருவாண்டா பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என இலங்கைக்கான மியன்மார் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மியன்மார் ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக விசேட கடிதம் ஒன்றும் தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இலங்கைக்கான மியன்மார் தூதுவரிடம் கையளித்துள்ளனர்.

மதுருஓய தம்மிசாரா தேரர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, கலாநிதி சன்ன ஜெயசுமன, விசேட வைத்திய நிபுணர் அசோகா கமலதாச, இலங்கை-மியன்மார் நட்பு சங்கத்தின் தலைவர் குமார சேமகே உட்பட சிலர் இதில் கலந்துகொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...