இந்திய வம்சாவளி மக்களுக்காக சேவைகளை செய்வதில் வாய்ப்பு கிட்டியமை எனக்கு பெருமிதம் - தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்(க.கிஷாந்தன்)

இந்திய வம்சாவளி மக்களுக்காக சேவைகளை செய்வதில் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி நான் பெருமிதம் அடைகின்றேன்.

மலையகத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி பகுதிகளிலும் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு ஆரம்ப கால தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான், அப்துல் அசீஸ் போன்றோர்கள் செய்த சேவைகளை மலையகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு இந்திய வம்சாவளி ஜீவனும் மறந்து விட கூடாது என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் இடம்பெற்ற ஈடோஸ் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஊடாக இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் 05.09.2017 ன்று கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் மேலும் தெரிவித்ததாவது,

மலையகத்தில் வாழ்கின்றவர்களுக்கு அவர்களின் வரலாறு தெரியவில்லை என்றால் ஏனையவர்களுக்கு எவ்வாறு தெரியும். மலையகம் என்றால் தேயிலை தோட்டங்களும் இறப்பர் தோட்டங்களும் நிறைந்தது என்று தான் எண்ணுகின்றார்கள். ஆனால் மலையகத்திற்கு வருகின்றவர்கள் பல்வேறு இடங்களை பார்வையிட செல்வதற்கும் அதன் அழகினை இரசிப்பதற்கும் வித்திட்டவர்கள் நமது மூதாதாயர்கள்.

கிளிநொச்சியில் ஒரு இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் எவ்வாறு தொப்புள் கொடி உறவு இருக்கின்றதோ அதேபோன்று இந்த நாட்டுக்கு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் அவரின் சகாக்கள் 700 பேரும் இலங்கையில் கொண்டுள்ள உறவு காரணமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தொப்புள் கொடி உறவு நீண்டுள்ளது.

மலையகத்திலிருந்து கிளிநொச்சி பகுதியில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மக்களில் இன்று வைத்தியர்கள், பொறியியலாளர்கள் என  பல்வேறு உயர் தொழில்களில் ஈடுப்படுவதுடன் பட்டதாரிகளும் ஏராளமாக உருவாகியுள்ளனர்.

காலத்தால் இவர்களின் உரிமைகள் அவ்வவ் அரசாங்கத்துடன் கேட்டு பெறப்பட்டது. இந்தவகையில் அமரர். தொண்டமான், அசீஸ் போன்ற தலைவர்கள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு எவ்வாறு அவர்களின் சேவைகளை புரிந்தார்களோ. அதனை போன்று கிளிநொச்சியில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கும் நான் சேவைகளை புரிந்ததில் பெருமை அடைகின்றேன்.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் மக்களுக்காக போராடிய தலைவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளயே சத்தியாகிரகங்கள் போராட்டங்கள் என பல்வேறு போராட்டங்களை மக்களின் உரிமைக்காக நடத்தினார்கள். இவர்களை பாராளுமன்றத்தில் இருந்து தூக்கி வெளியில் எரிந்த காலமும் உள்ளது.

ஆனால் இன்று அவ்வாறான நிலை இல்லை. உரிமைகளை மக்கள் வெளியிலிருந்து கேட்கும் நிலையே உருவாகியுள்ளத. மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வு நிலையை நினைத்தால் வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது. இவர்களுடைய உட்கட்டமைப்பு வசதிகள் கல்வி மற்றும் தொழில் உரிமைகள் என பலதரப்பட்ட உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாட்டில் வடக்கு பிரதேசத்தில் தமிழ் மொழி மாத்திரமே பேசக்கூடியவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். ஆனால் இன்று இந்த நிகழ்வில் நாட்டு மக்களுக்கு மொழி மூலமாகவும், இனம் மூலமாகவும், சமாதானத்துடன் எவ்வாறு வாழ்வது என்பதை மஸ்கெலியாவில் உள்ள சிறார்கள் வெளிகொனரி உள்ளனர்.

நான் கண்ட சமாதான கனவு மஸ்கெலியாவில் நிறைவேறி உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றேன். நாட்டு மக்களுக்கு நல்ல ஓர் செய்தியை சொல்லி உள்ள மஸ்கெலியா சிறார்களின் இந்த கலை நிகழ்வினை நாட்டு மக்கள் உணர்ந்தால் இந்த நாடு சமாதானமாக இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.

இந்திய வம்சாவளி மக்களாகிய மலையக மக்கள் அவர்களின் வாழ்வியலில் சகல விடுதலையும் பெற்று வாழக்கூடிய நிலை இன்றும் இல்லை. பாராளுமன்றத்தால் அமரர். தொண்டமான், அசீஸ் ஆகிய எனது முன்னவர்கள் பிராஜா உரிமை பெற்றுக்கொடுத்ததையும் என்னால் மறக்க முடியாது. அதேபோன்று ஒவ்வொரு இந்திய வம்சாவளி ஜீவனும் இதனை மறக்க கூடாது.

மலையகம் சமாதானத்தில் மொழி, கலை, கலாச்சாரம் போன்றவற்றில் சம அந்தஸ்த்து வழங்கி பேதங்கள் மறந்த இருப்பதை போன்று நல்ல விடயத்தை கலையின் ஊடாக வெளிப்படுத்தி உள்ள ஈடோஸ் முன்பள்ளி மாணவர்கள் ஒரு குருவாக அமைய எடுத்துக்காட்டிய நிலையில் இப்பாடசாலை கடந்த வருடத்தை விட இரண்டு மடங்கு முன்னேறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Attachments area